பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

மேடையில் அதியற்புதமாகப் பேசினார். பெருமானார் (சல்) அவர்களின் வாழ்வியல் தத்துவங்கள் மனிதகுல முன்னேற்றத்துக்கு எவ்வாறெல்லாம் அற்புத வழிகாட்டியாய் அமைந்துள்ளன என்பதையெல்லாம் சிறப்பாக விளக்கினார். மற்றவர்களும் அவ்வாறே பேசினர்.

இலக்கியத்தின் மூலம் பிரச்சாரம்

நாம் அண்ணலார் பற்றியும் இஸ்லாமிய நெறியைப் பற்றியும் சகோதர சமயத்தவர்களிடம் எதையெல்லாம் பரப்ப விழைகிறோமோ அவற்றையெல்லாம் அப் பேச்சாளர்கள் பிற சமயத்தவர் மத்தியில் மிக அருமையாக எடுத்து விளக்குகிற வாய்ப்பு உருவாகிறது. இவ்வாறு நாம் சொல்லக்கூடிய செய்திகள் அவர்கள் மூலமாக சொல்லவைத்தால் அது போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு வேகமாகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் போய் சேரும். அந்த நுட்பத்தை நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1959ஆம் ஆண்டே அறிய நேர்ந்த காரணத்தினால் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி பணியிலமர்ந்த பின்னர், இஸ்லாமியப் பிரச்சாரத்தை இலக்கியம் மூலம் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் முஸ்லிமல்லாதவர்களைக் கொண்டே நிகழ்த்துவதை ஒரு இயக்கமாக நடத்த முற்பட்டேன்.

இப் பணிக்கென்றே 'மீரா ஃபௌண்டேஷன்' எனும் அமைப்பை உருவாக்கினேன். 'மீரா' என்பது ஹிந்துக்களுக்கும் இஸ்லாமியத்திற்கும் பொதுவான பெயராகும். மேலும் 'M' - Modernity, 'E' - Enlightenment, 'E' - Equlity, 'R' - Reformation, 'A' - Ameliaration ஆகும். இவற்றின் தலைப்பெழுத்துக்களெல்லாம் ஒன்றிணைந்ததே 'MEERA' என்பது. UNESCO என்பதைப் போல் அமைந்துள்ள பெயராகும். இந்த ஐந்து ஆங்கில எழுத்துக்களினடிப்படையிலான சொற்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டதாகும்.