பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

பரிசு கொடு" என்று மிடுக்கோடு கேட்ட புலவருலகம், யாரிடம் சென்று எதைப் பாடினால் பரிசு கிடைக்குமோ அதைப் பாடி வந்த இழிவான கால கட்டம். தனவந்தர்களின் வீட்டு வாசலில் பிச்சை பெற தமிழ்ப் புலவருலகம் தவம் கிடந்த கால கட்டம். பாலுணர்வைப் பச்சையாக விளக்கும் ‘கூளப்ப நாயக்கன் காதல்’ போன்ற காமச்சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய நான்காம் தர இலக்கியங்கள் போற்றி வளர்க்கப்பட்ட காலச் சூழல்.

இந்த காலகட்டத்தில்தான் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் எழுத்தாணியைக் கையிலெடுத்து இலக்கியம் படைத்தார்கள். ஒழுக்க இலக்கியம் ஏதாவது தமிழில் உருவாகாதா என்று நல்லுள்ளங்கள் ஏங்கித் தவித்தன. சமயப் போர்வையில் தல புராணங்கள் என்ற பெயரில் அதீதக் கற்பனையோடு ஒழுக்கத்தைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாத சிற்றின்ப இலக்கியங்கள் புற்றீசல்போல் புறப்பட்ட காலத்தில், ஒழுக்கவியல் அடிப்படையில் அற்புதமான படைப்புகள் இஸ்லாமியத் தமிழ் புலவர்களால் இயற்றப்பட்டன. ஏனெனில், பாலுணர்வைப் பற்றிப் பாட இஸ்லாத்தில் அனுமதி இல்லை. மற்ற சமய தல புராணங்கள் போன்று இஷ்டத்துக்கு கற்பனை வளத்தோடு கதை விட இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

இஸ்லாமிய இலக்கியத்தின் கருப்பொருளாக பெருமானாரின் பெருவாழ்வோ பிற நபிமார்களின் வாழ்க்கைச் செய்திகளோ, நபித் தோழர்களின் செயற்பாடுகள், வலிமார்களின் வாழ்க்கைச் சூழல்கள், இஸ்லாமியப் பெண்களின் பெருமை பாராட்டும் செய்திகளே கருப்பொருளாக அமைய முடியும். இவர்களைப் பற்றி விவரிக்கும் இலக்கியங்களில் ஒழுக்க நெறிகளை, மார்க்க ஞானங்களை, இறைவன் திருமறை மூலம் விதித்த வாழ்வியல் நெறி முறைகளையே அடியொற்றி எழுத முடியும். இவ்வாறு, கருப் பொருட்களைத் தேர்வு செய்து, ஒழுக்கவியல் அடிப்