பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

என முழங்குவதிலும் எவரும் சளைப்பதுமில்லை; தவறுவதுமில்லை. தமிழுக்காக உயிரையும் கொடுப்பேன் என முழங்குவதற்கும் தவறுவதில்லை. தமிழைக் காக்க, வளர்க்க, வளப்படுத்த உயிரைக் கொடுக்க வேண்டாம், கொஞ்சம் உழைப்பைக் கொடுங்கள் என்று கூறினால், அதைக் கொடுக்க யாரும் தயாரில்லை.

இதையெல்லாம் நினைத்து நினைத்து, வெந்து போனவன் நான். 1956இல் அன்றைய கல்வியமைச்சராக இருந்த திரு சி. சுப்பிரமணியம் ஆட்சி மொழிச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியபின், இனி, மற்றவர்கள் தமிழ் வளர்ச்சிக்கு வழிவகை சொல்வார்கள் என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தேன். ஏதும் நடக்கவில்லை. இப்படி வெறுமனே காத்துக்கிடப்பதைவிட நம்மால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம் என்ற முறையில் சிந்தித்துச் செயல்படத் தொடங்கினேன்.

அறிவியல் அடிப்படையே வளர்ச்சிக்கு வழி

அறிவியலோடு ஒரு மொழி இணைந்து வளரவில்லை என்றால் அம் மொழிக்கு எதிர்காலமே இல்லை என்ற உணர்வு இதயத்தில் அழுத்தம் பெற்றிருந்ததால், அறிவியல் அடிப்படையில் தமிழ் வளர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளைப் பற்றித் தீர்க்கமாகச் சிந்தித்துச் செயல்படலானேன். அம் முயற்சி அறிவியல் தமிழ் வளர்ச்சியாக முகிழ்த்து, மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது. இதில் கடந்த நாற்பதாண்டு காலமாகத் தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறேன். இதற்காக நாளொன்றுக்கு பதினாறு மணி நேரம் செலவிட்டு வருகிறேன். என் முயற்சியை வளமான அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான அடிப்படைப் பணியாக - முன்னோடி முயற்சியாகக் கருதி, தமிழுலகம் பரிசுகளையும் பாராட்டுகளையும் விருதுகளையும் வழங்கி ஊக்குவித்து வருகிறது.