பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

கட்டிடம் எனக்குத் தெரியுமே என்று கூறிவிட முடியும். ஆனால் அக்கட்டிடத்தின் அகல, நீள, உயரம் எவ்வளவு; எத்தனை அறைகள் உள்ளன. அவை எவ்வகையின; என்னென்ன வசதிகள் இருக்கின்றன. இக்கட்டிடம் எந்த முறையில் கட்டப்பட்டிருக்கிறது. இதன் உறுதிப்பாடு என்ன? அதன் வலிவு எத்தகையது? காற்றோட்ட வசதிகள் என்ன? இதெல்லாம் தெரியாது. இவற்றையெல்லாம் நாம் அறியவோ அதிலுள்ளவைகளை அறிந்து, உணர்ந்து தெளியவோ இல்லை. தெரிந்ததெல்லாம் ஒரு கட்டிடம் என்பது மட்டுமே. அதனுள்ளே என்ன இருக்கிறது என்பது எதுவுமே தெரியாது. இதே நிலையில் பல முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு முஸ்லிமுக்கு மகனாகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக முஸ்லிமாக இருப்பவர்களே அதிகம்.

முஸ்லிமாகப் பிறந்தும் இஸ்லாமியனாக இல்லை

இன்று காலை ஒரு சம்பவம் நடந்தது. நேற்று துபை மீலாது விழாவில் பேசும்போது தொழுகையின் முக்கியத்துவத்தைப் பற்றி அதன் ஆன்மீக, உளவியல் மற்றும் அறிவியல் அடிப்படையிலான பயன்களைப் பற்றி பேசினேன். அதைக் கேட்ட நண்பர் ஒருவர் இன்று காலை என்னை வந்து பார்த்தார். தான் ஒரு முஸ்லிமாக இருந்தும் தன் தந்தையோ தாயோ, தனக்கு இஸ்லாத்தைப் பற்றி எதையுமே கற்பிக்கவில்லை. தான் மதரஸா பக்கமும் சென்றதில்லை. பள்ளிவாசல் பக்கமும் போனதில்லை. இதற்குக் குடும்பச் சூழலும் ஒரு முக்கிய காரணம். துபைக்கு வந்த பிறகுதான் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளி வாசலுக்குள் நுழைந்தேன். இப்போதும் எனக்குத் தனியே தொழத் தெரியாது. பக்கத்திலிருப்பவரைப் பார்த்து, அவர் செய்வதுபோல் செய்து தொழுது வருகிறேன். உங்கள் பேச்சை நேற்று கேட்டதிலிருந்து வெள்ளிக் கிழமை தொழுகை மட்டுமல்லாது ஐவேளைத் தொழுகையையும் தொழ விரும்புகிறேன். அதற்கான