பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

வழிகாட்டியாக ஏற்றதால் நீங்கள் முஸ்லிம்களாக இருக்கிறீர்கள். நாங்கள் அண்ணலாரின் நெறிமுறைகள் தெரியாததால், நீங்கள் முறையாக அவற்றை எங்களுக்குத் தெரியப்படுத்தாத காரணத்தால் நாங்கள் முஸ்லிம்கள் ஆகாமல் இருக்கிறோம். இது போன்ற கூட்டங்கள் இஸ்லாத்தையும் பெருமானாரையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை எங்களுக்கு அளிக்கின்றன. எனவே, எங்களுக்கும் சேர்த்து இறைத் தூதராக வந்த பெருமானாரை எந்த முஸ்லிமும் 'எம் பெருமானார்' என்று கூறாமல் ‘நம் பெருமானார்' என்றே பேச வேண்டும், எழுத வேண்டும் எனக் கேட்டும் கொள்கிறேன்” என்று பேசினார். அவர் பேசிய வாசகம் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தது; உண்மையின்பாற்பட்டது; இன்னும் சொல்லப் போனால் சத்திய வார்த்தைகளாகும்.

மாற்றுச் சமயங்கள் அல்ல, சகோதரச் சமயங்கள்

வேறொரு உண்மையையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் கவனித்திருக்கலாம். நான் பிற சமயங்களைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் 'மாற்றுச் சமயம்’ எனக் குறிப்பிடாமல் சகோதர சமயம் என்றே குறிப்பிடுகிறேன். பிற சமயங்களெல்லாம் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு, செயல்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்ட போக்கைக் கொண்டிருந்தாலும் நான் அவற்றை இஸ்லாத்துக்கு மாறுபட்ட மதங்களாக, மாற்றமான கொள்கைக் கோட்பாடுகளைக் கொண்ட சமயங்களாகக் கருதி, அவற்றின் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் முறையில் 'மாற்றுச் சமயங்கள்' எனக் குறிப்பிடாமல் 'சகோதர சமயங்கள்' என்றே குறிப்பிடுகிறேன். இதுதான் இஸ்லாம் உணர்த்தும் சமயக் கொள்கை; பெருமானார் காட்டியே பெருவழி.

இன்று உலகில் இருந்து வரும் பெரும் மதங்களும், மறைத்து போய்விட்ட பெரும் மதங்களும்கூட நம் சகோதர