பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களால் தீர்த்து வைத்திருக்கிறார். அவ்வப்போது அவர் கூறி வந்த கதைகளை அவர் காலத்தில் இருந்தவர்களும், பின்னால் வந்தவர்களும், வாய்மொழியாகக் கூறி வந்திருக்கிறார்கள்.

அவர் இந்தக் கதைகளை எந்த மொழியில் கூறி வந்தார்? தமிழிலா? இல்லை, ஆங்கிலத்திலா? அதுவும் இல்லை. கிரேக்க மொழியில் தான் கூறி வந்தார்! ஆம், அவருடைய தாய்மொழி அதுதான், அவருடைய தாய்நாடும் கிரேக்க நாடுதான்.

கிரேக்க நாட்டில், கிறிஸ்து பிறப்பதற்கு 620 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிறந்ததாகத் தெரிகிறது. ஆனால், கிரேக்க நாட்டில் அவர் எந்த ஊரில் பிறந்தார் என்பது. இன்னும் சரியாகத் தெரியவில்லை. “எங்கள் ஊரில்தான் பிறந்தார்; எங்கள் ஊரில்தான் பிறந்தார்” என்று இப்போது ஆறு ஊர்க்காரர்கள் பெருமையாகக் கூறி வருகிறார்கள். ஒருவர் எப்படி ஆறு ஊர்களில் பிறந்திருக்க முடியும்? ஏதாவது ஒரே ஓர் ஊரில் தானே அவர் பிறந்திருப்பார்? சில ஆராய்ச்சியாளர்கள் அவர் ‘சாமோஸ்’ என்ற ஊரில் தான் பிறந்திருக்க வேண்டும் என்கிறார்கள், ஊரின் பெயரைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். ஆளின் பெயரைத் தெரிந்து கொண்டாலே போதும். அவர் தாம் ஈசாப்.

ஈசாப் சொன்ன கதைகளையெல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1485-ஆம் ஆண்டு முதல் முதலாக வெளி விட்டார்கள். அதன் ஒரு பிரதி இப்போது கூட பத்திரமாக பிரிட்டிஷ் பொருட்காட்சி சாலையில் (British-Museum) கண்ணாடி அறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறதாம். இப்போது பல மொழிகளில் அந்தக் கதைகள் வெளிவந்து விட்டன. தமிழில் கூட அவரது கதைகளில் பலவற்றை நீங்கள் படித்திருப்பீர்கள். இப்போது அவற்றைப் பாடல்களாகப் படிக்கப் போகிறீர்கள்.

8