கண்ணைப் பறித்திடும் வண்ணத் தோகைதனைக்
காட்டி மயில்முன்னால் ஆடிவந்தே,
‘என்னையே நீங்களும் தேர்ந்தெடுத் தால்மிக்க
இன்பம் அடையலாம்’ என்றதுவே.
தோகையைக் காட்டிப் பசப்பும் மயிலதன்
தோற்றம் சபையைக் கவர்ந்ததுவாம்.
ஆகையால், அந்த மயிலினுக் கேசபை
அரசர் பதவி அளித்ததுவாம்.
பறவை அரசன் மயிலினை வாழ்த்தியே
பலத்த குரல்கள் எழும்புகையில்,
குருவி ஒன்று முன்னால் வந்துநின்று ‘நானும்
கூறிடும் வார்த்தையைக் கேட்டிடுவீர்.
கருத்துடன் நம்மவர் உயிரையெல்லாம் என்றும்
காத்திடல் அரசரின் கடமையன்றோ?
பருந்தும், கழுகும், வல்லூறுகளும் நம்மைப்
படுத்திடும் பாட்டுக்கும் எல்லையுண்டோ?
அந்தப் பறவைகள் செய்யும் கொடுமைகள்
அனைத்தும் அடக்கிட வேண்டுமென்றால்,
இந்த மயிலால் முடிந்திடு மோ? இதை
எண்ணிப்பார்த் தீர்களோ?’ என்றதுவே.
சிந்தனை செய்தன பறவையெல்லாம். உடன்
தேர்தலை ரத்துமே செய்தனவே.
‘இந்த மயிலின் பகட்டில் மயங்கி
இழந்தோம் மதியினை’ என்றனவே!
76