பக்கம்:ஈச்சம்பாய்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமுத்திரம்

99


அவர்களோடு ஆடப் போவதற்கு முயற்சித்த சிறுமிகளின் எலிவால் பின்னல்களை, தாயோ, பாட்டியோ இழுத்துப் பிடிக்கிறார்கள். ஆனாலும், அந்தச் சிறுமிகள் பாட்டிற்கேற்றபடி உடலாட்டி, பாட்டிகளையும், தாய்களையும் ஆட்டுவிக்கிறார்கள்.

அந்தத் தொண்டுக் கிழவர் மட்டும் டிரைவரின் இடதுபக்கமுள்ள வேன் தளத்தில் வைக்கப்பட்ட டிரங்க் பெட்டிகளையும், பூக்கூடைகளையும் அடிக்கடிப் பார்த்துக் கொள்கிறார். 'நீயெல்லாம் ஒரு பிள்ளையா' என்பது போல் குறட்டை விட்டுத் தூங்கும் அறுபது வயது மகனை கண்களால் கொத்தப் பார்க்கிறார்.

அந்த வேன் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை அங்குமிங்கும் சிதறிக் கிடந்த செங்கற்சூளைகளையும், சின்னச் சின்ன வீடுகளையும், மக்கிப் போன தேங்காய் நார் குவியல்களையும் கடந்து கப்பிச் சாலை முடியும் கரடுமுரடான மண்சாலைக்குள் திரும்பியதும் வாயாடியவர்களை, வாயடைத்துப்போக வைக்கும் கற்றுப்புறச சூழல்...

அந்தப் பகுதிக்கு எப்போது வந்தாலும், எப்படி வந்தாலும், எங்கிருந்து வந்தாலும் வெளியூர்க்காரர்களுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்திவிடும். புறம், அகத்தைத் தீர்மானிக்கும் ஒரு பொல்லாங்குச் சூழல்.

இருபக்கமும், பாதைக்கு வேலியான தாவரக் குவியல்கள். ஈச்ச மரங்களும், பனை மரங்களும் இடித்துக் கொள்கின்றன. கோணல் தென்னை மரங்கள், ஒன்றுடன் ஒன்று குஸ்திக்குப் போவதுபோல் முனைப்போடு நிற்கின்றன. கரடிப் பயங்காட்டும், கன்றுப் பனைகள்..... பழுத்த நரை விழுந்த கிழவன் போல், புழுத்த ஓலைகளோடு நிற்கும் பனை மரங்கள்... இவற்றில் சில, இடி விழுந்த உச்சிப் பொந்துகள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/101&oldid=1372021" இலிருந்து மீள்விக்கப்பட்டது