பக்கம்:ஈச்சம்பாய்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

103


இரண்டிரண்டு பேர் முன் வாசலையும், பின் வாசலையும் உடம்புகளைச் சாத்தி அடைத்துக் கொண்டார்கள். மற்றவர்கள் அரிவாள்களை ஓங்கியும், வேல் கம்புகளை தடவிவிட்டும் ஒவ்வொருவரையும் உற்றுப் பார்த்தார்கள்.

முகம் தெரிந்த எவரையும் காணோம் - குய்யோ, முறையோ என்று கூப்பாடு போட்டவர்கள்: அப்போதே செத்தவர்கள் போல் மூர்ச்சித்து கிடந்தவர்கள் : செத்துப் பேயாகி கத்துவதுபோல் கத்தியவர்கள்

இதற்குள் வெளியே தப்பித்து ஓடிய, தொண்டுக் கிழவரின் மகன், “எய்யா... எய்யா” என்று வேனுக்கருகே வருவதும், பிறகு ஓடுவதுமாக இருந்தார். ‘என்னையும் கொல்லட்டும்’ என்று முண்டியடித்த கல்யாண மாப்பிள்ளையை கக்கத்தில் அடக்கிக் கொண்டார். அதற்குள் இரண்டு பேர் கீழே குதித்து அந்த இருவரையும், வேல் கம்புகளை முதுகில் போட்டு அந்த வேனுக்குள் திணித்தார்கள்.

வேன்வாசிகள் ஆளுக்கு ஆள் முறையிட்டார்கள். “எங்க முகத்தப் பாருங்கையா... நாங்கெல்லாம் ஒங்களுக்கு எதிரியாய்யா? என்ன தப்புயா செய்தோமி? அதையாவது சொல்லிட்டு வெட்டுங்கையா.”

சண்டியர் தலைவன் ஒரு குரூரப் புன்னகையோடு கொடூரமாக விளக்கமளித்தான்:

“ஒங்க சாதிக்காரன், எங்க சாதிக்காரங்கள வெட்டிக் கொன்னா, எங்க கையி புளியங்காயா பறிக்கும்?”

“எங்க சாதி என்ன சாதின்னு தெரியாமலே கொல்ல வர்றது நியாயமா? நாங்க ஒங்க சாதியாக்கூட இருக்கலாமே....”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/105&oldid=1534479" இலிருந்து மீள்விக்கப்பட்டது