பக்கம்:ஈச்சம்பாய்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

101


“வச்சிருக்கேன்யா... நம்ம கண்ணே , நம்மள குத்திடக் கூடாதுய்யா ...”

“ஏலே... இந்தப் பசப்புற வேலை வேண்டாம். ஒரு நிமிஷம் டைம் கொடுக்கேன். எந்த சாதின்னு சொல்லு. இல்லாட்டா மாறு கை... மாறு காலுதான். ஏமுடா பாத்திட்டு நிக்கீக? இவனுக, எதிர் சாதிப் பயலுக. இதுக்கு மேல விட்டு வைக்கக்கூடாது.”

சில தாழ்ந்த அரிவாள்கள் மேலோங்கின. தொங்கிய வேல்கம்புகள் சாய்வாயின. ஓணானோடு விளையாடிவிட்டு, இறுதியில் அதைக் கடித்துக் குதறிப்போட, உடம்பை விறைக்குமே தெருநாய்... அந்த தெரு நாய்கள், வெறி நாய்கள் ஆனதுபோல் ஆயுதபாணிகளின் கண்களில் ஒரு செஞ்சிவப்பு: வாயில் ஒரு கொடூரப் புன்னகை. அந்தக் குழந்தை, வேல்கம்பர் பக்கம் தாவியது. அந்தக் கம்பை இழுத்துப் பிடித்து, தாத்தா.... தாத்தா.. என்று மாறி மாறிச் சொன்னது. உடனே அவர் ஓங்கிக் கத்தினார்:

“நாம எந்த சாதின்னு தெரியாததால, இவங்களும் சாதியை மறைக்காங்க, எனக்கு சந்தேகமே இல்லை, இவங்க நம்ம சாதிதான். வேணுமுன்னா இவங்களோட வேனை ஊருக்கு கடத்திக்கிட்டுப் போயி, அக்கம் பக்கம் விசாரிச்சு அப்புறமா கொல்லலாம். அதுவரைக்கும் நம்மகிட்டயே சிறை இருக்கட்டும்...”

“இந்தா பாரு சின்னச்சாமி அண்ணே ! நீ எங்களுக்குத் தலைவர்தான்... இல்லேங்கலெ... ஆனா இவங்களுல ஒருத்தன் தலையாவது உருண்டு, அது நம்ம சாதித் தலைன்னா, ஒன் தலை விழும்... குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் கம்பா நாம ஆயிடக்கூடாது. எதிர்ச் சாதிக்காரப்பயக இளக்காரமா சிரிக்கக் கூடாது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/109&oldid=1534481" இலிருந்து மீள்விக்கப்பட்டது