பக்கம்:ஈச்சம்பாய்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

101


போலீஸு, இரண்டு சாதியும் இல்லாம வேற சாதியா இருக்கும். கண்டவுடனே சுடுவானுக. நம்மள மாதிரி அவனுகளுக்கும் இத்தனை பேரைச் சுடணுமுன்னு ஒரு எண்ணிக்கை இருக்குதாம்.. மூட்டைப் பூச்சி கூட, அத நசுக்கப் போகும்போது செத்துப் போனது மாதிரி பாவலா செய்யும். உயிரோட மதிப்பு அதுக்குத் தெரியுது... நமக்குத் தெரிய வேண்டாமாய்யா? அதோ, போலீஸ் லாரி சத்தம் கேட்குது. ஒண்ணு ஓடுங்க... இல்லாட்டா, எங்ககூட வந்தது மாதிரி இதுல உட்காருங்க. ஒங்கள காட்டிக் கொடுக்க மாட்டோம்.”

நோஞ்சான் மனிதர் பாம்படக் கிழவிக்கு, பக்க பலமாகப் பேசினார்:

“ஆமாங்கய்யா. நாங்க உயிரோடு இருந்தாத்தானே ஒங்கள காட்டிக் கொடுக்க முடியாது? எங்க பிணம், ஒங்களுக்கு எதிரா சாட்சி சொல்லுமே! இதுக்கு பேர்தான் விதி அல்லது யதார்த்தம். நம்ம ரெண்டு சயிடும் உயிரோடு இருந்தாத்தான் ஒருத்தர் உயிரை இன்னொருத்தர் உயிரு, முட்டுக் கொடுக்கும். எங்க அக்கா சொன்னதைக் கேளுங்க. ஊர்ல அவளுக்கு வழக்காளின்னு பேரு. ஒரே சொல்லுல நிக்கிற அக்கா...”

போலீஸ் வாகனம் நெருங்கிக் கொண்டிருப்பதை அதன் குரல் காட்டியது. அந்த வேனுக்குள் நுழைந்தவர்களில் சண்டியன் உட்பட சிலர் வெளியே குதித்து ஓடினார்கள். வேல்கம்பர் உட்பட பலர், ஆயுதங்களைப் புதர்களுக்குள் எறிந்துவிட்டு, பால்குடிக்கத் தெரியாத பூனைகள்போல் இருக்கையில் உட்கார்ந்தார்கள். அந்த வேன்காரர்களோடு விரவிக் கிடந்தார்கள்.


தமிழன் எக்ஸ்பிரஸ் - பொங்கல் மலர் 1998
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/111&oldid=1371831" இலிருந்து மீள்விக்கப்பட்டது