பக்கம்:ஈச்சம்பாய்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

ஈச்சம்பாய்


இருக்கும் திக்கைப் பார்த்தாள். புருஷன் புதைக்கப்பட்ட திசையைப் பார்த்தாள். பிறகு, மடமடவென்று நடந்தாள். அவளுக்கு எல்லோரும் வழி விட்டார்கள். அவளை வழிமறித்துப் புத்திமதி சொல்லப்போன சில கிழவிகளை மேளாப் பிரமுகர்கள் அதட்டினார்கள்.

பெல்லிபாய், காட்டிற்குள் காடாகி, மலைக்குள் குகையான நேரம். சத்தமாகத் துவங்கிய மேளாக்கட்டு, நிசப்தமாக முடியப்போன சமயம்.... அவளைத் தலைமுழுகிவிட்ட நிதர்சனத்துடன், கூட்டம் கலையப்போன வேளை.

பெல்லிபாய், திரும்பி வந்தாள். அவசர அவசரமாய் வீட்டிற்குள் ஓடினாள்... கால்மணி நேரம் அவளின் தடயம் தெரியவில்லை. கூட்டம் அப்படியே திரண்டு நின்றது. மீண்டும் அவள் கோலத்தைப் பார்த்ததும் முதலில் திகைத்தது... பிறகு சிரித்துக் கொண்டது.

பெல்லிபாய், மார்புவரை புடவைகட்டி, காதுகளில் லொண்டான் லொடுக்கு வளையங்களைப் போட்டு - மார்பில் சாவிக் கொத்துகள் தொங்கிய பாசி மாலைகளுடன், முன் தலையில் தாழைமட்டை தொப்பி போட்டு, பின் தலையில் ஊமத்தம் பூக்குவியல்களை கமைபோல் வைத்து, வந்தாள். மறுபடி பிழைத்த அல்லது செத்த மலைஜாதிப் பெண்ணாய் வந்தாள். கூட்டம், இப்போது அவளை அங்கீகரித்துப் பார்த்த போது -

மேளாக் கட்டு எஜமானர் பாபன் நாய்க்கர் காலில், பெல்லி பாய் தன் தலைபடும்படி நெடுஞ்சாண்கிடையாக விழுந்தாள். இனிமேல் தலையெடுக்கப் போவதில்லை என்பதுபோல் அப்படியே கிடந்தாள். எவளோ - எவனோ அவளைத் தூக்கி விட்டபோது -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/120&oldid=1371685" இலிருந்து மீள்விக்கப்பட்டது