பக்கம்:ஈச்சம்பாய்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

ஈச்சம்பாய்


தொழுவிலிருந்து கிழக்குப் பக்கமாகத் திரும்பி, சமையலறையின் பின் கவரில் சாய்ந்து கொண்டு ஒட்டுக் கேட்டாள்.

ராசகுமாரிக்கு, அவர்கள் பேசுவது கிசுகிசுப்பாகவே கேட்டது. “மூணு ஏக்கர் நிலம், அக்கா தங்கச்சின்னு பிச்சுப் பிடுங்கல் கிடையாது. அம்மாவும் நல்லபடியா போய்ச் சேரந்துட்டாளாம்... ரொம்பத் தோதானது. நெனைச்சதுக்கு ஒருபடி மேலதான்... சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளதானடி..”

ராசகுமாரி மருண்டு போனாள். அந்த ‘சாண்பிள்ளை’ என்ற வார்த்தை அவளை உலுக்கி எடுத்தது. உற்றுக் கேட்டாள். மீண்டும் கிசுகிசுப்பு. ஒலிகள் அவளைப் பொறுத்த அளவில், அருவ நிலையிலேயே ஒலித்தன... அப்போ... ஒருவேளை மாப்பிள்ளை... குள்ளமா இருப்பானோ... போன மாசம் பஞ்சாண்டி ஊருல, இப்படித்தான் ஒரு அநியாயம் நடந்துதாம். வெளியூர் மாப்பிள்ளை மேள தாளத்தோட காருக்குள்ள இருந்தபடியே வந்திருக்கான். குண்டு முகமாம். அத வச்சு மாப்பிள்ளை பெரிய சண்டியர்னு எல்லாரும் நினைச்சிட்டாங்க... ஜன்னல் வழியா பார்த்த பொண்ணுகூட சந்தோஷப்பட்டாளாம். கடைசியிலே மணவறையிலே பொண்ணோட காலு தரையில நேரா பட முடியாமல்... அவளே அதை வளைச்சு வச்சாளாம். அந்த அளவுக்கு அவள் உயரமாம்... ஆனால், மாப்பிள்ளை காலு தரையிலருந்து ஒரு அடிக்கு மேல நிக்குதாம். இவ்வளவுக்கும் முழுக்காலுதான். ஆசாமிதான் குள்ளக் கத்திரிக்காய். எல்லோரும் கசாமுசான்னு பேசினாங்களாம். பொண்ணு அங்கேயே அழுதாளாம். ஆனாலும், போனது போச்சு, ஆனது ஆச்சுன்னு, ஊரும் உறவும் தாலி கட்டும்போது, பூமாரி பொழிஞ்சுதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/124&oldid=1371712" இலிருந்து மீள்விக்கப்பட்டது