பக்கம்:ஈச்சம்பாய்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

127


ராசகுமாரி, பித்துப் பிடித்து நின்றாள். இரண்டு கிளைகளுக்குள் கூடு கட்டியிருந்த காகம், அவள் தலைக்கு மேலே அங்குமிங்குமாய் பறந்து உச்சக் குரலில் கத்திக் கத்தி, கால்களால் அவள் தலையைப் பிராண்டியது. அவள் அசைவற்று நிற்பதைப் பார்த்துவிட்டு, கொத்துவதற்குக்கூட குறி பார்த்தது. ஆனாலும் அவள் பித்தம் கலையாமல் நடந்துகொண்டே இருந்தாள். எப்படி நடந்தாளோ எல்லோரும் சுற்றி நிற்பதுபோலிருந்தது. பீடி சுற்றும் பெண்கள் தட்டும் கையுமாக அவளைச் சுற்றி வட்டமிட்டு நின்றார்கள். அவர்களில் ஒருத்தி கேட்டாள்.

“ஒனக்கு கலியாணம் நிச்சயம் பண்ணிட்டாங்களாமே.... மாப்பிள்ளை எப்படியாம்..”

“நீ ஒருத்தி.... நம்மள மாதிரியா இவள்?... அடக்க ஒடுக்கமானவளாச்சே... அப்பா எவனக் காட்டுறாரோ, அவன கட்டுறவளாச்சே... குட்டையான மாப்பிள்ளைன்னா, அவன இடுப்புல எடுக்க கழுத்த குனிவாள்.. கொக்கனர் இருந்தால், அவன் இடுப்புல ஏறி, கழுத்த நிமிர்த்துவாள்... ஒன்னை மாதிரியா... என்னை மாதிரியா... தங்கமான பொண்ணாச்சே.”

ராசகுமாரிக்கு, அழுகை வந்தது. ஆனால், அந்த இரண்டு பெண்களும் அப்படிப் பேசியதால், அவள் அழுகை மேகம் கலைந்து, மனம் ஒரு புயலானது. ஆமாண்டி நான் அப்படித்தான் என்று சொல்லப் போனாள். இதற்குள் தெய்வயானை மயினி வெளியூரிலிருந்து அந்த ஊரில் வாக்கப்பட்டவள் கேட்டாள்.

“ஏ... ராசகுமாரி... ஒப்பா நல்லா பார்த்தாராமா... தீர விசாரிச்சாராமா. என்னை மாதிரி மாட்டிக்காதடி...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/129&oldid=1371753" இலிருந்து மீள்விக்கப்பட்டது