பக்கம்:ஈச்சம்பாய்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருமகள்

கண் சிகிச்சை முகாமுக்கான ஜீப், கிழவர் - கிழவியர் சகிதம், பொன்னம்மா பாட்டியின் வீட்டு முன்னால் வந்து நின்றது. பாட்டியின் மகன் முனுசாமியிடம், கிராம சேவக்கும் சேவிகையும் விளக்கமாக எடுத்துரைத்து, பொன்னம்மாவை ஜீப்பில் ஏற்றினார்கள். மருமகள்காரி வாசல்வரை வந்தாள். மாமியாரை ஜீப்பில் பார்த்ததும், தனக்கும் வயதாகி, கண்ணும் கெட்டிருந்தால், இந்த ஜீப்பில் எறியிருக்கலாமே என்று ஏங்கியவள் மாதிரி, பெருமூச்சு விட்டாள்.

ஏதோ ஒரு வழியாக, கண் சிகிச்சை முகாம் துவங்கியது. அந்த டிவிஷனைச் சேர்ந்த ஆறு பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்களும், இதர அதிகாரிகளும், கோட்ட வளர்ச்சி அதிகாரி தலைமையில், அந்தப் பஞ்சாயத்து யூனியனை முற்றுகை இட்டார்கள். யூனியன் ‘கவுன்சில் ஹால்’ ஆபரேஷன் தியேட்டராகியது. சென்னையிலிருந்து வந்த கண் டாக்டர்கள், கொண்டு வரப்பட்ட முதியவர்களின் சிலரது கண்கள் ‘இன்னும் பழுக்கவில்லை’ என்று கூறி, அவர்களைத் தள்ளிவிட்டார்கள். அப்படியும் நூற்றைம்பது கிழவர் - கிழவியர் தேறினர். இவர்கள் அனைவருக்கும் கண்புரை அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இது துவங்கியதிலிருந்து முடிவது வரைக்கும் - நான்கு நாட்களும் - நல்ல சாப்பாடும், ஆரஞ்சு, ஆப்பிள், அது இது என்றே ஏக அமர்க்களம். யூனியன் அருகே பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்காக இருந்த ‘சென்ட்ரல் கிச்சனில்’ சமையல் செய்யப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/132&oldid=1371774" இலிருந்து மீள்விக்கப்பட்டது