பக்கம்:ஈச்சம்பாய்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

131


கிழடுகளுக்கு அந்த நாளும் வந்தது. அன்று மாலையில் ஒவ்வொருவருக்கும் கலெக்டர், கண்ணாடி வழங்க வேண்டும். டி.வி. வரும். ரேடியோக்காரர்கள் வருவார்கள். மேடையில் பேகவதற்குச் சொற்பொழிவாளர்கள் வருவார்கள்.

கிராம சேவக் சீனிவாசனை, ஆணையாளர் தம் அறைக்குள் வரவழைத்தார்.

“சபாஷ் சீனி.... நாமதான் அதிகமாகப் பிடிச்சிருக்கோம். ஆனா குவான்டிட்டி மட்டும் போதாது, குவாலிட்டி ஆப் சர்வீஸ் முக்கியம். அதனால கலெக்டர் ஏதும் கேட்டால், நம்ம ஆட்கள், அவங்கள நல்லா கவனிச்சதாச் சொல்லணும், சொல்ல வைக்கணும். இந்தக் கலெக்டர் ரொம்ப இண்டலிஜன்ட் மேன். பல ஊர் தண்ணிய குடிச்ச மனுஷன். எந்தச் சமயத்துல என்ன கேட்பார்னு தெரியாது. அதனால பெரிசுகள உஷாரா கவனிச்சுக்கோ. புரியுதா? யாரும் கம்ப்ளெயிமனட் பண்ண மாட்டாங்களே? எதுக்கும் நீ சரிக்கட்டுற விதமாச் சரிகட்டு, போய்யா கண்ணு.”

சீனிவாசன் ‘சரிக்கட்டப்’ போனார். “தாத்தாமாரே, பாட்டிமாரே, கலெக்டர்கிட்ட நாங்க நல்லா கவனிச்சதாசி சொல்லணும்.” என்று மன்றாடினார். அப்படி மன்றாடியது தப்பாய்ப் போயிற்று.

“யோவ்... நீ கொடுத்த அழுவுன ஆரஞ்சி இங்கதான் இருக்கு, கலெக்டர்கிட்ட காட்டப்போறேன்” என்றார் ஒருவர். “சோறுல.... இருந்த கல்லுங்களப் பொறுக்கி வச்சிருக்கேன். கலெக்டர்கிட்ட காட்டப் போறேன்” என்று ஒரு படுகிழவி பல்லவி பாடினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/133&oldid=1371778" இலிருந்து மீள்விக்கப்பட்டது