பக்கம்:ஈச்சம்பாய்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவம்மாவின் குழந்தை

இறுகத் தார் பாய்ந்த வேட்டியில் மரத் தூள்களும் மண் தூள்களும் இரண்டறக் கலந்த செம்மண் கோலத்தில் குடிசைக்கு வந்த கன்னையா, கழுத்தில் தொங்கிய கோடரியைக் கீழே வைத்துவிட்டு, குடிசைக்கு முன்னால், வேலிகாத்தான் முட்செடிகள் மொய்த்த இடத்தருகே இருந்த மண் பானையில் இருந்த நீரை, கையாலேயே மொண்டு கால் கைகளைக் கழுவிக் கொண்டே, பாதி திறந்திருந்த குடிசைக்குள் நோட்டம் விட்டபடி, "டேய் ராமா... டேய் ராமா.." என்றான்.

ராமன் திருப்பிக் குரல் கொடுக்கவில்லை. வெய்யில் அடிக்கிற மாலைப் பொழுதில், தந்தை வந்து விடுவார் என்ற அனுமானத்தோடு எங்கெல்லாமோ விளையாடிவிட்டு, அங்கே வந்து திண்ணையில், இரண்டு முழங்கால்களையும் பின்னால் மடித்துப் போட்டுக் கொண்டு, இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியில் தவமிருப்பதுபோல் உட்கார்ந்திருக்கும் அந்த ஏழு வயதுப் பயலுக்கு என்ன வந்து விட்டது? வீட்டுக்குள்ளே படுத்துக் கிடக்கிறானா? கையில் காலில் அடிபட்டு, அப்பா பார்த்தால் அடிப்பார் என்று பயந்து குடிசைக்குப் பின்னால் நிற்கிறானா?

மகனுக்காக வாங்கி மடியில் கட்டியிருந்த ஆழாக்கு அரிசிப் பொடியும் அரையாழாக்கு 'உடச்ச கடலையும் கொண்ட மிக்ஸ்சர் பொட்டலத்தை ஒரு கையால் பிடித்துக் கொண்டே கன்னையா குடிசைக்குள் வந்தான். அங்கே, பையனின் நோட்டுப் புத்தகங்கள் சிதறிக் கிடந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/140&oldid=1371802" இலிருந்து மீள்விக்கப்பட்டது