பக்கம்:ஈச்சம்பாய்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

ஈச்சம்பாய்



கட்டிய பெண்டாட்டியும் கட்டாத பெண்டாட்டியும் கன்னய்யாவின் தோளில் கிடந்த ராமனும் பயத்துடன் கூச்சலிட்டார்கள். அவர்கள் கூச்சல் அக்கம் பக்கத்துக்காரர்களை கூட்டி விட்டது... கூலி வேலைக்குப் போய்விட்டு, திரும்பி வந்தவர்கள், தத்தம் வீடுகளுக்குப் போகாமலே, அங்கே கூடிவிட்டார்கள். எப்படியோ விவகாரத்தை கிரகித்துக் கொண்ட ஒரு இளைஞன், கன்னய்யாவுக்குச் சவாலிட்டான்.

"ஏண்டா, ஊர்விட்டு ஊர் வந்தா அடிக்க வந்தே! நீ, அவன் மேலே கத்திய நீட்டுறது எங்க மேல நீட்டுறதுக்குச் சமானம். இந்த ஏரியாக்காரனுகள பொட்டைன்னு நினைச்சியா?"

ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்த இளைஞனை அடக்கினார்.

"சும்மா கிடடா... அவன் பெண்டாட்டியப் பறிகொடுத்த பேஜாருல நிக்கிறான். இதுல ஏரியா மானம் எங்க வந்திருக்கு? நம்ம வீட்டுப் பொண்ணுங்களை யாராவது கூட்டிக்கினு போனால் நாம சும்மா இருப்பமா' குடும்ப விஷயத்துல ஊரைக் கட்டித் தோரணம் போடப்படாது. இந்தாப்பா, அவதான் உன்னை உதறித் தள்ளிட்டு வந்துட்டாளே, ஒனக்கு வேற பொண்ணா கிடையாது" அவளப் போயி ஏன் கூப்பிட வந்தே?"

கன்னய்யா, அமைதியாகப் பேசினான். "நான் அவளைக் கூப்பிட வரலை.. என் பையனைத் தூக்கிட்டு வந்துட்டாள். அவனை எடுத்துப் போக வந்தேன். ஒங்க டெய்லரு என்னையக் கைய வச்சு அளவெடுக்கப் பாக்காரு. சோறுபோட்ட மனுசன சாப்பிட்ட பெரிய மனுசன்... திருடுபோன என் குழந்தையைத் தூக்கிட்டு போறேன்.... அவ்வளவுதான் விஷயம்."

பூவம்மா, ஒரு மூலையில் நின்று கத்தினாள். "என் கொயந்தயக் கொடுக்க முடியாது. முடியாதுன்னா முடியாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/148&oldid=1371780" இலிருந்து மீள்விக்கப்பட்டது