பக்கம்:ஈச்சம்பாய்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13


இன்றைய இளந் தலைமுறை தொலைக்காட்சியின் தாக்கத்தால் சீரழிவுக்கு உள்ளாவதை இயல்பாக விளக்கும் 'பெரியம்மா மகன்' கதையில் தொலைக்காட்சித் தமிழை ஆங்கிலங் கலந்த தமிங்கலத்தை அப்படியே கையாள்கிறார் ஆசிரியர். தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியொன்றுக்கு வந்திருப்பவர்களை நோக்கி அந்நிறுவனத்தின் சார்பில் சிம்பா என்னும் பெண்மணி பேசுகிறார்.

"ஹாய் பாய்ஸ் அண்டு கேர்ள்ஸ்! உங்கள் 'ஜிப்சி' சிம்பாவோட மார்னிங் வணக்கங்கள்... ஓகே... சப்ஜெக்ட்டுக்கு வருவோமா? 'ஜிப்சி' நிறுவனத்தின் சார்பில் தொலைக்காட்சியில் நான் கொடுத்த இன்விடேஷனுக்கு இணங்கி இங்கே வந்திருக்கிற உங்களுக்கு என்னோட மெனி மெனி தேங்ஸ். இந்த நிகழ்ச்சி புதுமையானது. பொதுவாக நம்மோட மெஜாரிட்டி எங்ஸ்டர்ஸ் காதலில் ஈடுபடுறதில்லங்க. கேக்கிறதுக்கே கஷ்டமாயில்ல? அதுதான் பேக்ட்டுங்க..."

பாத்திர வளர்ப்புக்குப் பயன்படும் இந்த உரையாடல் புதிய 'மணிப் பிரவாளமாக' அமைந்துள்ளது. தொலைக்காட்சித் தமிழ் நிகழ்ச்சிகளில்தான் களையப்படவேண்டிய இத்தகைய கலப்படம்! அளவுக்கதிகமான ஆங்கிலக் கலப்பில் சில படைப்பிலக்கியவாதிகளுக்கு ஆராக்காதல்! நண்பர் சமுத்திரத்தின் எழுத்துகளில் காலவோட்டத்தில் இக்கலப்பு குறைந்து வந்துள்ளது மனங் கொள்ளத்தக்கது.

உய்த்துணர்தல்

சிறந்த இலக்கியம், சில செய்திகளை வெளிப்படையாகச் சொல்லாமல் உய்த்துணர்வுக்கு விட்டுவிடும். மகளுக்குப் பார்த்த மாப்பிள்ளை என்னும் மையக்கருத்தில் வரையப்பட்ட 'முகமறியா முகம்', மாப்பிள்ளை, 'சாண்பிள்ளை'தானா என்பதை இறுதிவரை விளக்காமல் செல்கிறது. வெளிப்படையாக விளக்காததே இக்கதைக்குரிய சிறப்பாக அமைந்து விடுகிறது. சாதி மோதல்கள் பற்றிய கதைகளில் முன்னர் வெளிப்படையாகச் சாதிகளைக் குறிப்பிட்ட சமுத்திரம், இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/15&oldid=1495098" இலிருந்து மீள்விக்கப்பட்டது