பாசக் கணக்கு
ராமையா, தண்ணீர் புரையேற, “மூக்கும், முழியுமாக” திண்டாடினார். அதற்குக் காரணமான அவரது மனைவியோ, அவர் காதுகளில், நீர்த்துளிகள், அந்தக் காலத்து கடுக்கன்கள் மாதிரி மின்னுவதை ரசித்துப் பார்த்த போது, அவருக்கு கோபமும் புரையேறியது. ஆத்திரமாக ஏதோ பேசப் போனார். இதனால், அவர் வாய் குளமாகி, பற்கள் மதகுகளாகி, உதடுகள் நீர் கசியும் கால்வாயானதுதான் மிச்சம். அவர் தண்ணீர் குடிக்கும் போதோ, இவள் வெற்றிலையை குதப்பும் போதோ, எந்தப் பேச்சும் வைத்துக் கொண்டால், கணவர், பெர்ராச் சட்டம் மீறப்பட்டது போல் குதிப்பார் என்பது தெரிந்தும், அந்தம்மா அந்தச் செய்தியைச் சொல்லி விட்டாள். அவர் வந்ததும், வராததுமாக ஒரு செம்புத் தண்ணீரை, அவர் கையில் இவள் திணிக்க, அதை அவர் வாயில் பொருத்திய போது, மருது டெலிபோன் செய்த செய்தியை சொல்லியிருக்கக் கூடாதுதான். ஆனாலும், ஆர்வக் கோளாறில் சொல்லி விட்டதால், அவரது அய்ம்புலன்களும் கோளாறாகி விட்டன. அதற்குப் பிராயச்சித்தமாக, மிருதங்கத்தைச் சரி பார்ப்பது போல், அவரது தலையைத் தட்டியும், குட்டியும், தடவியும் சமாதானம் சொன்னாள்:
“ஒங்க பையன் உங்கள நினைக்கான்… அதனாலதான் புரையேறிட்டு…”
ராமையா வாய்க்குள் தேங்கிய தண்ணீரை, ஜன்னல் கம்பிகளின் இடைவெளியில் ஊடுருவ விட்ட போது, அவர் தன்னிடம் பேசப் போவதாகத்தான் அந்தம்மா நினைத்தாள்.