பக்கம்:ஈச்சம்பாய்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

பெயர்ச்சொல். இதனையே 'நொண்டிச் சென்றான்' என்று இடையில் வல்லெழுத்து மிகுந்துச் சொல்லும்போது, நொண்டிக்கொண்டு சென்றான் என்று பொருள் தந்து 'நொண்டி’ என்பது வினையெச்சமாகிவிடுகிறது. புள்ளியெழுத்து வெளிப்படுத்தும் பொருள் மாற்றம் புணர்ச்சி இலக்கணத்தைப் புறக்கணிக்கக்கூடாது என்பதைப் புலப்படுத்தும். செங்கற்களிடையே சுதையைப்போலச் சொற்களைப் பிணைத்துச் செல்பவை இந்தப் புள்ளிகள். இவற்றை அறிந்து கையாள வேண்டும். அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின் க்,ச்,த்,ப் ஆகிய வல்லெழுத்துக்களை முதலாக உடைய சொற்கள் வந்தால் முறையே அவ்வெழுத்துக்கள் மிகும் என்பது எளிய விதி. 'இந்த தொலைக்காட்சி' 'அந்த சுருட்டைத்தலையன்' என்று ஒற்றிடாமல் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். நண்பர் சமுத்திரத்தின் எழுத்துக்களிலும் இப்படிச் சில பகுதிகள் இடம் பெற்றுள்ளன. அடிப்படைவிதிகள் சிலவற்றை மனங் கொண்டாலே போதும். பெரும்பாலான மொழிப் பிழைகளைப் படைப்பாளிகள் தவிர்த்து விடலாம்.

நண்பர் சமுத்திரம் முதலிய நாடறிந்த எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகள் பலவும் இதழ்களில் வெளி வந்தவையே. அதிலும் மிகுமக்களைச் சென்றடையும் வாணிக இதழ்களில் வெளிவந்தவையே அதிகம். அந்த இதழ்கள், மேட்டுக்குடி அல்லாதோர் நடத்துபவையாயிருந்தாலும், வெளிப் படுத்துவதும் தூக்கிப் பிடிப்பதும் மேட்டுக்குடிப் பண்பாடே. அதனால் அந்த இதழ்களில் எழுதும் எழுத்தாளர்களும் மேட்டுக்குடி கலாச்சார பங்களிப்பாளர்களாக மாறிவிடுகின்றனர். கருநாடகம், கேரளம் முதலிய அண்டை மாநிலங்களில் இந்தக் கருத்தோட்டம் மேலோங்கிய நிலையைப், படைப்பாளிகளிடையே பார்க்க முடியுமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழகத்தின் தனித்த இந்தச் சூழ்நிலையிலும் தனது வர்த்தகக் கலாச்சார எதிர்ப்புக்கண்ணோட்டத்தைச் சிறிதும் இழக்காமல் படைப்பாக்கம் செய்யும் சமுத்திரக் கலைஞனை 'நின் பணி தொடர்வதாக' என வாழ்த்துகிறேன். தமிழ்கூறு நல்லுலகத்திற்கு இந்நூலை மகிழ்வுடன் பரிந்துரைக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/17&oldid=1495303" இலிருந்து மீள்விக்கப்பட்டது