பக்கம்:ஈச்சம்பாய்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

ஈச்சம்பாய்



மகள் அம்பிகாவை நல்லபடியாய் கரை சேர்த்த, வீடியோ சாட்சியான திருமணக் காட்சிகள். அடுத்த மறுவாரம் மருது தன்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டே ஜி.ஆர்.ஏ... என்கிற தலையைச் கற்றுகிற பரீட்சையில் ஆசியாவிலே ஏழாவது இடத்தில் தான் வந்திருப்பதை தெரிவித்தபோது ஏற்பட்ட, 'ஈன்ற பொழுதினிலும், பெரிதுவந்த ஆனந்தக்காட்சி. பிறகு, 'கேம்பஸ் இண்டர்வியூவில கிடைத்த பத்தாயிரம் ரூபாய் வேலையில சேரு... அமெரிக்காவில போய் எம்.எஸ். படிக்க வேண்டியதில்லே' என்று இவரு குதியாய்க் குதித்த வில்லத்தனமான காட்சிகள்.... இதையடுத்து மருது நடத்திய உண்ணாவிரதப் போராட்டம்... எப்படியோ இந்தக் குறுக்குத்தெரு மருது, அமெரிக்க மருதாக புறப்பட்ட பிரிவுக் காட்சி. அவன் போய்ச் சேர்ந்த உடனேயே அவனுக்காக டீச்சிங் அஸைன்மென்ட் காத்திருந்ததாய் மருது டெலிபோனில் சொல்லும்போது ஏற்பட்ட புளகாங்கிதம்... இப்போது அவன் கார் வாங்கியதைக் கேள்விப்பட்ட பரமானந்தம்... இதோ மருது கழுத்தில் டை கட்டி, வெள்ளைக்காரன் மாதிரி உடம்பை லேசாய் சாய்த்து, கார் கதவைத் திறந்து இருக்கையில் உட்கார்ந்தபடியே ஏதோ ஒரு தூக்கலான இடத்தில் நிற்கும் நண்பர்களைப் பார்த்து கையாட்டுகிறான்.

கோதையம்மா, அந்த நண்பர் குழுவில் இருந்த ரெண்டு பெண்களை எடிட் செய்தபடியே, மகன் காரை ஓட்டும் கண்கொள்ளாக் காட்சியை ரசித்தாள். 'பாத்து ஓட்டுடா என் ராசா' என்று தன்னை அறியாமலேயே முணுமுணுத்தாள்.

கோதையம்மாவின் மனப்படம், ஒரு இருமல் சத்தத்தால் அறுந்தது... பக்கத்தறையில் அந்த மனுசன், 'ஒரு தடவை இருமிவிட்டுப் போகாமல், தொடர் இருமலை மேற்கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/174&oldid=1371717" இலிருந்து மீள்விக்கப்பட்டது