பக்கம்:ஈச்சம்பாய்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

ஈச்சம்பாய்



கோதையம்மா கைகளை நெறித்தாள்... கண்களை இறுக்கினாள்.... கண்ணாடி பிரேமுக்குள் சுருங்கிப் போன படம்போல, வலுவான எலும்புக் கூட்டிற்குள் சதையற்ற உடம்பு அங்குமிங்குமாய் ஆடியது... அவள் பேசாமல் நின்றாள். உடனே ராமையா மீண்டும் கட்டிலில் ஏறி, குப்புறப் படுக்கப் போனார்... கோதையம்மா அவர் மார்பில், கரங்களை அணையாய்ப் போட்டு, அவரை சரியாய் உட்கார வைத்தபடியே, "சரிப்பா.. எப்படியோ மனச கல்லாக்கிக்கிட்டு சொல்லிடுறேன்... அப்படிப் பாக்காதிக... அவன் செய்ததும் நியாயமில்லை" என்றாள்...

ராமையா சாப்பிடுவதற்கு ஆயத்தமாய் எழுந்தார்... மனைவி வாக்குக் கொடுத்துவிட்டாள்... அதை நிறைவேற்றிவிடுவாள் என்ற நம்பிக்கை திருப்தியுடன் அடம்பிடித்து வெற்றி கண்ட குழந்தைபோல் எழுந்தார்... அதற்குள் டெலிபோன் சத்தம்.... கோதையம்மாதான் எடுத்தாள்...

"ஹலோ, மருதுவா... மத்தியானம்தானடா பேசுனே.. என்னடா நீ- எப்ப வேணும்னாலும் பேசலாம்... யார் வாரது. பஞ்சாப் பிள்ளயானாலும் அவன் என் பிள்ளை தான்.. ரெண்டு நாள் என்ன... எவ்வளவு நாள் வேணுமுன்னாலும் இருக்கட்டும்... அவன்கிட்ட உனக்கு ஏதாவது கொடுத்தனுப்பணுமா... அப்பாவா... இருக்...இருக்கார். கொடுக்கேன். கொடுக்கேன்... அப்பாகிட்ட பேசிட்டு போனை வச்கடாதே... ஒரு முக்கியமான விசயமா உன்கிட்ட நான் பேசணும்..."

கோதையம்மா நீட்டிய டெலிபோனை, ஒரு பயில்வான், கர்லாக் கட்டையை எடுப்பதுபோல் ராமையா எடுத்தார்... ஆத்திரத்தில் டெலிபோன் குமிழை, திருதராஷ்டிரன் வீமன் சிலையைப் பிடித்ததுபோல் பிடித்தபடியே, ஏகத்தாளமான குரலில் கேட்டார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/178&oldid=1371708" இலிருந்து மீள்விக்கப்பட்டது