பக்கம்:ஈச்சம்பாய்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாக்கு மரம்

“நீங்க சரியான பத்தாம்பசலி மேடம்.... இந்தக் கம்மலை கழற்றி எறிஞ்சிட்டுப் பேசாமல் ரிங் போடுங்க பார்க்கிறதுக்கு அழகாய் இருப்பீங்க, அதாவது இப்போ இருக்கறதைவிட”..

அவள் கோபப்பட்டவள் போல, கதவுமேல் போட்ட இடது கரத்தையும், தங்க வளையல் அலங்கரித்த வலது கரத்தையும், இடுப்பில் அம்புக்குறிபோல் வைத்தாள். பின்னர் வாசலுக்கு வெளியே நின்றவனின் முகத்தில் அடிக்காத குறையாகக் கதவை மூடுவதற்காக, தனது கரங்களை இடுப்பிலிருந்து விடுவித்தாள். அதற்குள் அவன் முந்திக் கொண்டான்.

“நானும் என் ஸிஸ்டர்கிட்டேயும் இதுக்கு எதிர்ப்பதமாய்ச் சொல்லிச் சொல்லிப் பார்க்கேன். எந்த ஸிஸ்டர், அண்ணனோட பேச்சைக் கேட்டாள் - இவள் கேட்கிறதுக்கு?”

அவள், இப்போது, அவனை லேசான சிரிப்போடு பார்த்தாள். அப்புறம் லேசாய் யோசித்து முகம் கழித்தாள். அவனோ தன் கருத்துக்கு உரையாசிரியனாய் ஆகிவிட்டான்.

“ஒங்க முகம் வட்ட முகம். இந்தக் காதுங்கள்ல ரிங் போட்டால் ஒரு பௌர்ணமி நிலா பக்கத்துல இரண்டு குட்டி நிலாக்கள் வட்டமடிக்கற மாதிரி தெரியும், என்னோட ஸிஸ்டர் முகமோ, நீண்ட முகம். கம்மல் மாட்ட வேண்டிய காதுல ரிங் போட்டிருக்காள். அதனால வளையத்துக்குள்ளே நுழையற சர்க்கஸ் புலி மாதிரி தெரியறாள். எவ்வளவு பெரிய ரிங் என்கிறீங்க. அதுக்குள்ளே அவள் முகத்தையே திணிச்சுடலாம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/181&oldid=1388154" இலிருந்து மீள்விக்கப்பட்டது