பக்கம்:ஈச்சம்பாய்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காதல் குருவிகளின்

பார்வையிலே...

கோடைக் காலம் கொடுத்துவிட்டுப் போன கொடைக் காலமான வசந்த காலம். சென்ற கோடையின் கதகதப்பையும், வரப் போகிற குளிர் காலத்தின் குளிர்மையையும் உள்ளடக்கிய 'பருவ காலம்'. நிலத்திற்கு நரைமுடியாய்ப் பட்டுக்கிடந்த புற்கள், பசுமை தட்டித் தழைத்த நேரம். இலையுதிர்ந்த மரங்களில் இலை தழைகள் துளிர் விட்ட சமயம்.

கிளைகளே கரங்களாய், முட்களே நகங்களாய்க் கொண்ட ஓடைமேட்டின் உடைமரங்களில் உட்கார்ந்திருந்த தூக்கணாங் குருவிகள் ஆணும் பெண்ணுமாய் அமர்ந்திருந்தன. தொலைவில் உள்ள காடுகளில் கோடைக்குப் பதுங்கிவிட்டு நேற்றுதான் அவை வந்திருக்க வேண்டும். சுற்றுப்புறத்தை ஆராய்வதுபோல் அலகுகளை நிமிர்த்தின. பறவைகளில் 'கேடியான' வெள்ளைப் பிடறிக் காகங்கள் அருகே கூடு கட்டுவதால் சற்றே கலக்கமடைந்ததுபோல் தோன்றின. அதேசமயம், எந்தப் பறவையினத்திற்கும் தீங்கு விளைவிக்காத பறவையின 'ரவுடிகளான' அண்டங்காக்காக்கள் இருப்பதில் ஆறுதல் கொண்டன. ஆண் குருவிகளின் தலையில் சின்னச் சின்ன கொண்டைகள். மேனி முழுவதும் வண்ணக் கலவைகள். ஆண் குருவிகளின் மார்பு வெளிர் மஞ்சள் நிறத்திலிருந்து, இப்போது மஞ்சள் பழுப்பு நிறத்திற்கு வந்துவிட்டது. அதாவது காதல் வந்துடுச்சுன்னு அர்த்தம்!காரணமான காதலுக்கு, காரியமான கூட்டைப் பின்ன வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/19&oldid=1495610" இலிருந்து மீள்விக்கப்பட்டது