பக்கம்:ஈச்சம்பாய்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

23



இந்தச் சமயத்தில் வழக்கம்போல் அந்த இளஞ்ஜோடி வந்தது. ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டுச் சிரித்தபடி சிணுங்கியபடி, அவனும் அவளுமாய் வந்தார்கள். அன்று குருவிகளும் பார்க்க, கேட்க, நுழைய முடியாத ஒரு தொலைதூரத்துப் புதர் பகுதிக்குள் இருவரும் சென்றார்கள்.

ஒரு மணி நேரம் கழித்து அந்த மனிதக் குட்டிகள் திரும்பி வந்தன. மரக் கிளையில் சோர்வாக உட்கார்ந்திருந்த மஞ்சள் பிரகாசி அவர்களையே பார்த்தது. அவள் தலைமுடி வழக்கத்திற்கு மாறாகக் கலைந்திருந்தது. புடவை முழுக்க புழுதிக் கோலம். அடிக்கடி முகம் முழுவதையும் துடைத்துக் கொண்டாள். காலிலும் கையிலும் விழுந்த கீறல்களுக்கு மணலைச் சலித்துப் போட்டுக் கொண்டாள். அவனோ நிறைவோடு நிற்பவன் போல், காலில் சிக்கிய ஒரு உருளைக் கல்லை உருட்டியபடியே, 'சிறு' தேர் ஓட்டினான். திடீரென்று அந்தப் பெண் அழுதாள்: கைகளை உதறினாள். பிறகு முகத்தில் படரவிட்டுக் கொண்டு விம்மினாள்.

அவன், அவள் தோளைத் தட்டிக் கொடுத்தான், அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தபடியே அவள் காதோரம் ஏதோ கிசுகிசுத்தான். அதில் என்ன மந்திரம் இருந்ததோ. அவள் விம்முவதை நிறுத்திவிட்டாள். அவனை நாணத்தோடு பார்த்தாள். பிறகு அழுகையைப் பழி வாங்குவதுபோல் சிரிக்கப் போனாள். பின்னர், என்ன நினைத்தாளோ, அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள். அவன் ஏதோ சொல்ல, அவள் சிரித்தே விட்டாள். கால் மணி நேரத்திற்கப் பிறகு அவன் தயங்கித் தயங்கி எதையோ சொன்னான். அவள் எந்தத் தயக்கமும் இல்லாமல் தன் மூக்குத்தியைக் கழற்றி அவனிடம் கொடுத்தாள். அவனோடு இணைந்து, பிணைந்து நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/25&oldid=1495616" இலிருந்து மீள்விக்கப்பட்டது