பக்கம்:ஈச்சம்பாய்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

ஈச்சம்பாய்


பாண்டியா, கண்மண் தெரியாமல் ஓட்டினான். எண்பது கிலோமீட்டர் வேகம் இருக்கலாம். குமுதா சிறிது பயந்து போனாலும் அந்த வேகம் அவளுக்கு பிடித்துப் போய்விட்டது. பின்பக்கமாய் ஓவர்டேக் செய்ய வரும் லாரியை மறித்து முன் பக்கமாய் வரும் பேருந்துக்கு குறுக்காய் வண்டியை வளைத்து அவன் ஓட்டிய விதமே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியைக் கொடுக்கும். இந்த இளங்கோவும் இருக்கானே -- தாம்பரத்துல லாரி வருதுன்னா சைதாப்பேட்டையிலேயே ஸ்கூட்டரை நிறுத்துவான். அட்வென்சர்னா என்னன்னே தெரியாதவன்.

பாண்டியா, நாவலூர் பக்கம் ஒரு கடை முன்னால் பைக்கை நிறுத்தினான். கட்டு விரலை ஆட்டியபடியே, ரெண்டு கோலாக்களை கடைப் பையனையே கொண்டு வரச்செய்தான். ஒன்றைப் பல்லால் கடித்து, குப்பியை குதறி கடித்து, வீசினான். பிறகு பைக்கிலிருந்து இறங்கினான். ஆங்கிலப் படங்களில் வருமே அப்படி அவள் முன்னால் போய் மண்டியிடுவது போல் லேசாய் காலை வளைத்து அவளிடம் அந்த கோலாவை நீட்டினான். அவள், அவனைப் பார்த்தபடியே, சிரித்துக் குடித்தாள். அவனும் குடித்தான். பிறகு இவன் தான் குடித்து பாதியிருந்த கோலாவை அவளிடம் நீட்டினான்.... உடனே அவள் அதை வாங்க மறுத்ததுபோல், தொலைக்காட்சியில் விமல் சேலை விளம்பரத்தில், ஒரு பைலட் அதிகாரிக்கு கைகளால் தனது முகத்தை மறைத்தபடியே சிரிப்பாளே அந்தப் பெண்ணைப்போல சிரித்தாள். பிறகு, அங்குமிங்குமாய் பார்த்தபடியே அவன் கையிலிருந்த கோலாவை வெடுக்கென்று பற்றிக்கொண்டு, தனது கோலாவை முந்தானையால் மறைத்த படியே அவனிடம் நீட்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/42&oldid=1371916" இலிருந்து மீள்விக்கப்பட்டது