ஒரு சபதத்தின்
மறுபக்கம்
அந்த மூன்று கட்டு, பழம் பெரும் வீட்டில் நவீனமான மேக்கப் போடப்பட்ட முதற்கட்டின் தெருப்படிகளில் கால் மிதிக்க, தயங்கி நின்றான் மாரிமுத்து… அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தான். அவன் பின்னால் வந்த சொந்த நாய் கூட, அவனை ஒரு மாதிரி பார்ப்பது போல் இருந்தது. உடனே அவன் கீழே குனிந்து கல்லை எடுப்பது போல் பாசாங்கு செய்த போது, அவன் மீது நம்பிக்கை வைத்தது போல், அது வாலாட்டி நின்றது. உடனே இவன் கல்லுக்குப் பதிலாக ஒரு மண்கட்டியைத் தூக்கி எறிந்த போது, அது செல்லக் கோபத்தோடு பின் வாங்கியது.
மாரிமுத்து, அந்தப் படிகளை மிதிக்கலாமா, வேண்டாமா என்று ஒரு நிமிடம் சிந்தித்தான். இருபதாண்டு காலமாக அந்த வீட்டுப் படியை மிதிப்பதில்லை என்று போட்டிருந்த சபதம்… அவன் தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டான்… சபதம் முக்கியமல்ல… அதன் நோக்கம்தான் முக்கியம்… அந்த ஊரிலேயே, கால் பகுதியை மடக்கிப் போட்டிருக்கும் இந்த அரண்மனை வீட்டிற்கு, உறவாடுவதற்கோ, யாசகம் கேட்டோ, படி மிதிப்பதில்லை என்றுதான் சபதம்… இந்த சபதத்தால் தன்னைத் தோளில் தூக்கி கொஞ்சிய தாய் மாமன் செத்த போது கூட, இந்த வீட்டுப் படியேறியதில்லை… சுடுகாட்டுக்குப் பக்கத்திலுள்ள கருவேலமரக் காட்டில் தாய் மாமா எரிந்து முடிவது வரைக்கும் ஒரு கௌரவ வெட்டியானாக காத்து நின்றவன். ஆனால், அப்பேற்பட்டவன் படி மிதிக்கப் போகிறான். ஆனாலும்,