பக்கம்:ஈச்சம்பாய்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

47


முத்துவேல் எழுந்திரிக்கப் போனான். அதற்காகவோ என்னவோ போய் வருகிறேன் என்பதுமாதிரி பாப்பாவை பவ்வியமாகப் பார்த்தான்.. அவளோ பழையபடியும் ஒரு தூண் மறைப்பிற்குப் போய் மாரிமுத்துவின் கண்படாத கோணத்தில் நின்றுகொண்டு போக வேண்டாமென்று முத்துவேலுக்கு கண்ணாட்டி, முகமாட்டினாள். அந்த கடைக்கண் பார்வையில் முத்துவேலுக்கு அண்ணன் ஒரு கடுகாகத் தெரியவில்லைஎன்றாலும் கடுக்காய் கொடுக்கும் அளவிற்கு முக்கியத்துவம் அற்றவனாய் தெரிந்தான். சாவகாசமாகப் பதிலளித்தான்...

‘நீ போண்ணே !. நான் வந்துக்கிட்டே இருக்கேன்.’

‘காலையில டெல்லியில் இருந்து வந்தவன். இரண்டு வருசமாய் பாக்கல.... எங்கிட்ட முகத்தக் காட்டாமல் யாருகிட்ட காட்டக் கூடாதோ அவங்ககிட்ட முகம் காட்ட வந்துருக்கே... என்னடா புது உறவு.. எழுந்திரிடா...’

‘போண்ணே . பின்னால வாறேன்...’

‘இப்போ நீ வந்துதான் ஆகணும்... ரெண்டு பேரும் சேர்ந்து ஊர்ல நடந்தா அதுதான் பெருமை...’

‘ஒன் பெருமைக்கு நான்தானா கிடைச்சேன்?.... நான் தான் வாரேன்னு சொல்றேனே- கொஞ்சம்கூட ஒரு இது இல்லாம’

‘சரி... ஒன்னை இப்போ தம்பியா கூப்பிடலை... பங்காளியாக் கூப்புடுறேன்... நம்ம ரெண்டு பேருக்கும் கணக்கு வழக்கு பாக்கணும். பாகம் பிரிக்கணும்... வயசான அம்மா. ஒன்கிட்ட இருக்கணுமா... இல்ல எங்கிட்ட இருக்கணுமான்னு தீர்மானிக்கணும்...’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/49&oldid=1371947" இலிருந்து மீள்விக்கப்பட்டது