பக்கம்:ஈச்சம்பாய்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

ஈச்சம்பாய்



கட்டிக்கணும்முன்னா சொல்லு.. நான் இவனை இங்கேயே விட்டுட்டு போயிடுறேன்...

முத்துக்கனி பதில் சொல்ல முடியாமல் திணறினாள்... உடன்பட்டால் நியாயக் குற்றம்... உடன்படாவிட்டால் வீட்டுக் குற்றம். தான் மாட்டிக் கொண்டது போதாதா...

மாரிமுத்து, அவளுக்கு பிரச்சனையைக் கொடுத்து இருப்பதைப் புரிந்து கொண்டவன்போல், தம்பி பக்கம் திரும்பிப் பேசினான்.

நீ எவளுக்கு ஏங்கிறியோ... அவள், தான் மட்டும் பதுங்கினதைப் பாத்தியா... ஒப்புக்காவது ஒரு சொல் சொன்னாளா.. இதுக்குபேர்தான் தெய்வீகக் காதலுன்னா. நான் விடமாட்டேண்டா.. அந்தச் சீமைப்பன்றி சொல்றமாதிரி ஒன் கல்யாணத்தை நான் வியாபாரமாக்கல.... ஒனக்கு எங்க இஷ்டமோ அங்கே கட்டிக்கோ. எந்தச் சாதியாவும் இருந்துட்டு போகட்டும். சட்டைக்காரியா இருந்தாக்கூட தப்பில்லே... இந்த வீட்டுல நீ கட்றதுனால எனக்கு நஷ்டமில்லே... ஆனா இது ஒனக்கு புதைமண் வீடு... நம்ம அம்மாவ கேவலப்படுத்திய வீடு.. பழசை மறக்கலாம்... மன்னிக்கலாம்... ஆனா அதே பழசு புதுசா வேடம் போட்டால் நாமதான் ஒதுங்கிப் போகணும்... இதையும் மீறி நீ இந்த வீட்டுலதான் சம்பந்தம் எடுப்பேன்னா இந்தா அரிவாள்... ஒங்கையாலயே என்ன வெட்டிப்போடு..'

மாரிமுத்து, தோளோடு இடுக்கி வைத்திருந்த தம்பியின் வலது கைக்குள் அரிவாள் பிடியை திணித்துவிட்டு, அவனுக்கு வெட்ட தலைகொடுப்பவன்போல் தலை குனிந்தான். முத்துவேல், குத்துக்கல்லாய் நின்றபோது, மாரிமுத்து முதுகை நிமிர்த்தாமல், தலையை மட்டும் நிமிர்த்திப் பேசினான்....'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/56&oldid=1371992" இலிருந்து மீள்விக்கப்பட்டது