பக்கம்:ஈச்சம்பாய்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

75



களுக்குத் தெரியாது" என்று மாமி திலகமிட்டபடி சொன்ன வார்த்தைகளை மீனாட்சி காதுகளில் பயபக்தியோடு வாங்கிக் கொண்டாள்.

மௌனித்து வெளியேறப்போன மீனாட்சி, லட்கமி மாமியையும், பஞ்சாபகேச மாமாவையும் மாறி மாறிப் பார்த்தாள். பெண் ஆஜானுபாகு என்று மாமியைச் சொல்லலாம். செம்பருத்திப் பூ நிறம். ஐந்தரை அடிக்கும் மேலான உயரம். இந்த ஐம்பது வயதிலும் தொந்தி போடாத வயிறு. உடையாத உடம்பு. பாதாதி கேசம் வரை நேர் கோடாய் இருக்கும் மேனி; லேசாக நரையோடிய கூந்தல்.

மஞ்சளும் குங்குமமும் கலந்து மங்களமாய்ப் பொங்கிக் கொண்டிருப்பதுபோன்ற முகம். ஆனால் மாமா, மாமி அளவு உயரந்தான்... நிறம்தான். என்றாலும் உள்ளடங்கிய உடம்பு... காய்ந்து போய்க் கட்டையாய்ப் போனது போன்ற கால் கைகள். ஆனாலும் கண்ணாடி வழியாகப் பார்க்கும் அந்தக் கண்களிலோ எவரிடமும் காணப்படாததுபோன்ற ஒரு ஜீவ ஒளி, குழந்தைத்தனமும் மேதைத் தனமும் இரண்டறக் கலந்து ஒளிமயமானது போன்ற விழிப்பு.

மீனாட்சி போனதும், லட்கமி மாமி, நிதானமாக குனிந்து கீழே கிடந்த கடிகாரத்தை எடுத்தபடி கணவனை நோக்கி நடந்தாள். உடனே அவர் குழந்தையைப்போல் தம் கையை நீட்டினார். கடிகாரத்தை அவர் மணிக்கட்டில் கட்டிவிட்டு, டைனிங் டேபிளில் இருந்த கண்ணாடி டம்ளரை உடைத்தாலும், உடையாமல் கிடந்த களிம்புப் பாட்டிலைக் கொண்டு வந்து கணவரின் உராய்ப்புகளுக்குக் களிம்பிட்டாள். பஞ்சாபகேசன் குழந்தைபோல் கேட்டார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/77&oldid=1371982" இலிருந்து மீள்விக்கப்பட்டது