பக்கம்:ஈச்சம்பாய்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

ஈச்சம்பாய்

அப்போ இதே நீங்கதான், மாமிக்கு என்னப்பா வந்தது குத்துக்கல்லு மாறி இருக்காளே? போய்க் கூட்டிண்டு போனா என்னன்னு கேப்பேன். ஆனாலும் நான் ஊர் வாய்க்காக, இவரை இப்படி செமந்துட்டுப் போறதுல. இதுல எனக்கும் ஒரு சொகம் இருக்கு, உடம்ப, உடலுறவுக்கு மட்டுமுன்னு நினைக்கிற சின்னஞ் சிறுசுகளா -- ஒங்களுக்கு இந்த சொகத்தோட அருமை தெரியாது."

சாஸ்திரி பவனில், அந்த அலுவலகத்தில் கமார் நூறு பேர் கூடியிருந்தார்கள். பஞ்சாபகேசனின் உதவி அதிகாரி விழாவுக்கு வந்த பல்வேறு அதிகாரிகளையும் ஊழியர்களையும் வரவேற்றுக் கொண்டிருந்தார். யாருடைய ஓய்வு விழாவுக்கும் இந்த மாதிரி கூட்டம் கிடையாது என்று பேசிக் கொண்டார்கள். பெண்கள் கண்களில் நீர் பொங்கின. ஆண்கள் மனத்தில் ஏதோ ஒருவித அடைப்பு.

மாமியும், மாமாவும், மேடையில் நடு இருக்கைகளில் அமர்த்தி வைக்கப்பட்டார்கள். ஒருவரி மாற்றி ஒருவராகப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர், "மாமா இப்போது ஒரு குழந்தை. அவரது மனைவி இப்போது அவருக்கு அன்னை . இவருக்குச் செய்வதுபோன்ற தொண்டை, எந்த அன்னையும் செய்திருப்பது சந்தேகம்" என்றார். இன்னொருவர், பத்திரிக்கையாசிரியர் "சோ எழுதிய 'எங்கே பிராமணன்?' என்ற நாவலைப் படித்தேன், அவர் மட்டும் இந்த பஞ்சாபகேச மாமாவைப் பார்த்திருந்தால், தம் கேள்விக்கு விடை கண்டிருப்பார். மனத்தாலும் எதிரிக்குத் தீங்கு நினைக்காத மா மனிதர் இவர். பகவத் கீதையின்படி ஒரு பிராமணன் வாழ்கிறான் என்றால் அது இந்தப் பிராமணன் தான். பிராமணன் என்ற நினைப்பில்லாத மிக உயரிய பிராமணன் இவர்" என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/80&oldid=1371620" இலிருந்து மீள்விக்கப்பட்டது