பக்கம்:ஈச்சம்பாய்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

ஈச்சம்பாய்


பகவான் நேக்கு ஒரு குழந்தைதான் கொடுக்கல்ல. இவரையாவது நன்னா வச்கக்கக் கூடாதோ? பத்து வருஷத்துக்கு முன்னாடி பார்க்கின்ஷன் நோயோ... பக்கவாதமோன்னு ஏதோ வந்து இவர என்ன பாடு படுத்துது! இவர மட்டுமா, இவர வச்சு என்னையும் என்ன பாடு படுத்துது? ஒருவேளை, ஒரு காலத்துல அவர் சொன்னமாதிரி நான் தான் துரதிருஷ்டக்காரியோ... இதுவரைக்கும் ஆபீஸ் ஆபீஸ்னு அடிச்சுண்டார். இனிமே வீட்டுக்குள்ள எப்படி இருப்பாரோ? என்னாலதான் எங்கேயாவது நல்லது கெட்டதுக்குப் போக முடியுமா?”

லட்கமி மாமி திடுக்கிட்டாள். கணவர் நடக்க முடியாமலும் அப்படி நடந்தால் கீழே விழுந்து எழ முடியாமலும் இருக்கும் பரிதாப நிலையைப் பெரிதாய் நினைக்காமல், தான் படும் பாட்டைப் பெரிதாய் நினைத்ததில் சிறிதாய்ப்போனவள்போல் கூனிக் குறுகினாள். கூட்டத்தைச் சங்கோஜமாகப் பார்த்துவிட்டுத் தலை கவிழ்ந்தாள்.

பேச்சாளர்கள், புகழாரம் முடிந்தது. மனைவியின் தோளைப் பற்றியபடியே பஞ்சாபகேசன் ஏற்புரைக்கு எழுந்தார். தில்லியில் “ரெஃபரன்ஸ் இந்தியா” புத்தகத்தைத் தயாரிப்பதிலும் நேருஜியின் சொற்பொழிவை, தமிழாக்கம் செய்வதிலும் தமக்கு ஏற்பட்ட பெருமித உணர்வை நினைத்தார். தம் கட்டுரைகளை மேலதிகாரிகள் தங்கள் பெயரில் பிரசுரித்துச் சபாஷ் வாங்கிக் கொண்டதும், பிறகு உண்மை தெரிந்த தலைமை அதிகாரி, அவர்களை டிரான்ஸ்பர் செய்யப் போனதும், தாம் தலையிட்டு, மேலதிகாரியிடம் அப்படிச் செய்ய வேண்டாம் என்று கெஞ்சியதும், மாமாவுக்கு, நினைவுகளாய், நிகழ்ச்சிகளாய் வந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/82&oldid=1371838" இலிருந்து மீள்விக்கப்பட்டது