பக்கம்:ஈச்சம்பாய்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

81


அதோடு, தம் பேச்சு மிக அருமையாக எடிட் செய்யப்பட்டிருப்பதாகவும், அப்படிச் செய்தவருக்கு தம் நன்றியைத் தெரிவிக்கும்படியும் நேருஜி டிபார்ட்மெண்டுக்கு எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது, உடனே தலைமை அதிகாரி, தன்னைப் பாராட்டிச் சர்க்குலர் போட்டு, நோட்டீஸ் போர்டில் தொங்க விட்டதும் நினைவுக்கு வந்தது.

அவற்றையெல்லாம் சொல்லத்தான் போனார். ஆனால் அவற்றைவிட, ஓர் உருவம் அவர் கண் முன்னால் தோன்றியது. நினைவுகளின் கமையில் அதுமட்டும் சுவையாக வந்திருக்க வேண்டும். அவர் எடுத்த எடுப்புக்கெல்லாம் ஈடுகொடுத்த சிநேகிதி, தோழி - மனைவி - தாய் - ஆதிபராசக்தி கண் முன்னால் தோன்றி இருக்க வேண்டும்.

கூட்டத்தை எதிர்நோக்கி நின்ற பஞ்சாபகேசனால் பேச முடியவில்லை. லேசாகத் திரும்பினார். மனைவியை விழி ஆடாமல் பார்த்தார். இடுப்பின் இருபக்கமும் கிடந்த கைகளை மெல்லத் தூக்கினார். உயரே உயரே கொண்டு போனார். அவளைப் பார்த்தபடியே கை கூப்பினார்.

லட்கமி மாமி, “ஏன்னா, ஏன்னா” என்று பதறி எழுந்தபோது, பஞ்சாபகேசன் கும்பிட்ட கரங்களை இறக்காமல், கொட்டும் விழிகளைத் துடைக்காமல், உடலாட, உயிராட நின்றார். பிறகு கூட்டத்தைப் பார்த்து மீண்டும் திரும்பி, “எல்லாத்துக்கும் இந்த உத்தமி.. இந்த”... என்றார்.

பஞ்சாபகேசனால் பேச முடியவில்லை. கூட்டத்தினரின் கண்களிலும் ஒட்டு மொத்தமாய் நீர் சுரந்தது. மாமாவை விட்டுவிட்டு, மாமியையே பார்த்தார்கள். ஆண்கள், தத்தம் மனைவியரை ஒப்பிட்டுப் பார்த்தார்கள். பெண்களோ, அவளைப் பயத்தோடும் பக்தியோடும் பார்த்தாலும் அந்தப்-

ஈ. 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/83&oldid=1371844" இலிருந்து மீள்விக்கப்பட்டது