பக்கம்:ஈச்சம்பாய்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

ஈச்சம்பாய்


பார்வைகளுக்குள் தங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்ற அச்ச உணர்வும் மறைந்திருந்தது.

எப்படியோ ஓய்வு விழாவை முடித்துவிட்டு, இருவரும் வீட்டுக்குத் திரும்பும்போது இருட்டிவிட்டது. அலுவலக ஊழியர்கள் இருவர், அவர்களை டாக்சியில் கொண்டுவந்து போட்டுவிட்டு அழுதபடியே போய்விட்டார்கள். இதுவரை அழுதழுது மாமாவுக்குச் சில சின்னச் சின்ன உதவிகளைச் செய்தவர்கள், இப்போது நிஜமாகவே அழுவதைப் பார்த்து விட்டு, மாமி அழுதாள். மாமாவும் அழுதார்.

மறு நாள், காலையில் எழுந்ததும் மாமா காபி சாப்பிட்டபடியே, “வெந்நீர் ரெடியா?” என்றார். உடனே லட்சுமி, “இனிமேல் ஆத்துலதானே இருக்கப் போறேன். சாவகாசமா குளிக்கறதுக்கென்ன?” என்றாள்.

பஞ்சாபகேசன் மாமா, பாதி காபியை நல்லவேளையாக வீசாமல் தள்ளி வைத்தார். மாமி புரிந்து கொண்டாள். “நேக்கு ஒடம்புக்கு முடியல. கழுத்துல கட்டி வந்துருக்கு. ஒரே வலி, டாக்டர்ட்டே காட்டலாமுன்னு ஒரு வாரமா நெனைக்கிறேன். அதனால்தான் வெந்நீர் ரெடியாகல. காபியைக் குடிங்கோ” என்றாள்.

அவ்வளவுதான்.

பஞ்சாபகேசன், அருகே இருந்த ரேடியோ பெட்டியைக் காலால் இடறினார். அது பாட்டோடு பாட்டாய்த் தரையில் விழுந்து ஒப்பாரி வைத்தது. அதோடு நிற்காமல் தம் பனியனைப் பல்லைக் கடித்தபடியே கிழித்தார். தலையிலும் அடித்துக் கொண்டார். பிறகு, “ஒடம்புக்கு ஒண்ணுன்னா டாக்டர்ட்டே போகாம ஏன் இருந்தே. என்னை மட்டுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/84&oldid=1371848" இலிருந்து மீள்விக்கப்பட்டது