பக்கம்:ஈச்சம்பாய்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

ஈச்சம்பாய்


லட்சுமி மாமி, சலனம் இல்லாத முகத்தோடு பதிலளித்தாள்.

“நான் வரல.”

"ஏன் மாமி...?

“மாமா இன்னும் ஒரு மாசத்துக்கு மேலேயே உயிரோடு இருப்பார். என்னோட தாலிக்கு ஒண்ணும் ஆபத்து வரல்ல.”

“என்ன மாமி கன்னா பின்னான்னு? நீங்க வராம நான் போகல.”

“அசடு. அப்படிப் பேசப்படாது. இங்கே வா. நான் சொல்றத யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் செய்யுடி. நீ மாவிளக்கு எத்திறியோ இல்லியோ... ஒனக்கு ஒரு கொறையும் வராது. உம்... கையில அடி.”

மீனாட்சி, சத்திய உணர்வில்லாமல், மாமி சொல்லப் போவதைக் கேட்கும் ஆர்வத்தில், அவள் கையில் மாறி மாறி அடித்தாள்.

“யார்கிட்டயும் சொல்லாதடி! இப்ப அடயாறிலிருந்துதான் வரேன்... கழுத்து வலிக்குதுன்னு, ஃபாமிலி டாக்டர்ட்ட போனால், அவர் இங்க அடயாறுக்கு அனுப்பினார். அங்க கான்சர் இன்ஸ்டிட்யூட்ல டெஸ்ட் பண்ணினால், நேக்கு கழுத்துல கேன்சராண்டி... ட்வான்ஸ்ட் ஸ்டேஜாம். இன்னும் ஒரு மாதத்துல உயிர் போயிடுமாம்.”

மீனாட்சி, மாமியைத் திடுக்கிட்டுப் பார்த்தாள். அவளுக்கு ஒரு பிரமை. அந்தரலோகத்தில், மாமி, தான் அல்லாத வேறு யாருடனோ அந்தரங்கமாய்ப் பேசுவதுபோல் கேட்டது. ஆனால் லட்சுமி மாமியின் முகமோ எந்தவிதச் சலனத்தையும் காட்டவில்லை. சாவை ஏற்கனவே சந்தித்ததுபோன்ற கண்கள், அதனுடன் பேசுவது போன்ற வாய். மாமி தரையை நோக்கித் தன்பாட்டுக்குப் பேசுவதுபோல் பேசினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/86&oldid=1371860" இலிருந்து மீள்விக்கப்பட்டது