பக்கம்:ஈச்சம்பாய்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

ஈச்சம்பாய்


சுந்தரம், ஆபத்துக்குப் பாவம் இல்லையென்பதுபோல் அவளைத் தூக்கி நிறுத்தினார். தலையில் அடிக்கப்போன கரங்களைப் பிடித்துக் கொண்டார். இவருக்குப் பரிச்சயப்பட்டவள் தான். பலதடவை வீட்டுக்கு வந்தவள். ஒருவர் உருமாற ஆண்டுக்கணக்கில் ஆகும். இளமயான குண்டுக் கன்னங்களும், துருத்திய கண்களும், குழிகளாக மாற ஆண்டுக்கணக்கில் ஆகும். ஆனால் இப்படி ஒரே நாளில் கூட ஆகுமா...

ஆக முடியும் என்பதற்கு அத்தாட்சியாக, நின்றவளுக்கு கண்களால் கருணை காட்டி - யாமிருக்கப் பயமேன் என்பதுபோல் பார்த்துவிட்டு ‘அதான் நான் வந்திட்டேனில்ல... இன்னும் ஏன் அழுகிறே..’ என்று சொல்லிவிட்டு, அவரை கொக்குகள் போல் தலைநிமிர்த்திப் பார்த்த ஆறு வயதுப் பையனையும், எட்டு வயது சிறுமியையும்... “நல்லா படிக்கணும்.... படிப்பீங்களா... அம்மாவ அழாதிங்கன்னு சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டே நடந்தார்.

சுந்தரம், காவல் நிலைத்தின் ஆறுபடிக்கட்டுக்களையும் மூன்று மூன்றாய்த் தாவி, மேட்டுத்தனத்தில் நின்று உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு, நுழைந்தார். அங்கே இருப்பவர் களையும், இருந்தவற்றையும் பார்க்கப் பார்க்க, அவரது ஆவேசத்தில் பாதி ஆவியாகியது. மீதி வேர்வையானது. பல்லிகள் மாதிரி சுவரில் அப்பிய துப்பாக்கிகள்... கழுத்தும் காலும் சேர்த்துக் கட்டப்பட்ட ஒரு இளைஞன்.... சிறிது தொலைவில் அய்யோ அம்மா என்று கேட்கும் கூக்குரல்... அதற்குப் பதிலாக அவர்களது அம்மாக்களையும் அக்காக்களையும் வம்பிற்கிழுக்கும் வார்த்தைகள்... பகாகர வயிறுகள்... இரைச்சல் போடும் மைக்குகள்... வெளியுலகம் தெரியாத உள்ளுலகம்... அதுவே பலருக்கு நரகம்... அந்த நரகமே சிலருக்குச் சொர்க்கம்....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/94&oldid=1371897" இலிருந்து மீள்விக்கப்பட்டது