பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

103


சமத்துவ நெறியும் சமநீதியும் நிலைநாட்டப்படுவதற்காகவே அரசியலை அவர் ஒரு களமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். மூட நம்பிக்கைகள், சமயநெறி, உயர்சாதி மனப்பான்மை, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகிய தளைகளை அறுத்தெறிய முற்பட்ட சமூக சீர்திருத்தவாதி பெரியார்.

1879ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் நாள் வெங்கட நாயக்கரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். பன்னிரண்டாம் வயதில் படிப்பை நிறுத்திவிட்டு தந்தையாருக்கு வணிகத் தொழிலில் துணை புரிந்தார். தந்தைக்குப்பின் 1911இல் முழுமையாக வணிகத்தில் ஈடுபட்டார். நகர்மன்றத் தலைவராக இவர் விளங்கியபோது ஈரோட்டுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.

இவர் 1919இல் காங்கிரசில் சேர்ந்தார். தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு ஆகிய இரு களங்களில் தீவிரமாக விளங்கினார். குடும்பத்தோடு கதர் அணிந்து கதர் துணிகளை மக்களிடையே பரப்பினார். ஒத்துழையாமை இயக்கத்தின் போது நீதி மன்றப் புறக்கணிப்பை மேற்கொண்டு 50000 ரூபாய் பெறுமானமுள்ள பத்திரங்களை எரித்தார், மதுவிலக்குப் போராட்டத்தின் போது தன் தோப்பிலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டினார். 1924இல் கேரள மாநில வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமைக்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தபோது போராடி வெற்றி கண்டார். பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும் சகோதரி கண்ணம்மாளும் பல போராட்டங்களில் பங்கேற்றனர்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறைத் தீர்மானத்தைக் காங்கிரஸ் எதிர்த்ததால் 1925ல் காங்கிரசிலிருந்து வெளியேறினார். அத்தீர்மானத்தை நீதிக்கட்சி ஏற்றாலும், அது போதாது என்று சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். 1944ல் சேலத்தில் நீதிக்கட்சி மாநாட்டில் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் ஆக்கினார். தம் கொள்கைகளுக்காக குடியரசு, விடுதலை, பகுத்தறிவு, உண்மை, ரிவோல்ட் இதழ்களைத் தொடங்கி ஓயாது எழுதினார். 'பெரியார்' என்று