பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

107


"இதனை மேன்மேலும் நடத்தினவன் அறுபத்து நான்கு விளையாட்டு விளையாடின அழகிய சொக்கர் அருளைப் பெறுவான்" என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.

அபிடேக நீர்தாங்கிச் செல்லும் சிவபிராமணர் மட்டுமே கருவறைக்குள் நுழையும் உரிமை பெற்றிருந்தனர். "குடங்கொண்டு கோவில் புகுவான்" என்று அழைக்கப்பட்ட அவர்களே பெரும்பாலான கொடைகளைப் பெற்று சந்திர சூரியர் உள்ளவரை நடத்தி வைப்பதாக எழுதிக் கொடுத்துள்ளனர்.

மகிழன் குளம் (மகிழ்வனமுடையார் - பெருந்தலையூர்) பெருந் திருவாட்டி வாய்க்கால் என்பனபோல இறைவன், இறைவி பெயர்கள் கோயில் தொடர்புடைய இடங்களுக்கு வைக்கப்பட்டிருந்தன. தொடக்க காலத்தில் சிவன் கோயில்களில் அம்மன் சன்னதிகள் தனியாக இல்லை. பின்னரே அவை தனியாக அமைக்கப்பட்டன. அம்மன் சன்னதிகள் "திருக்காமக்கோட்டம்" எனப்பட்டது. அம்மன் "திருக்காமக் கோட்டத்து நாச்சியார்" எனப்பட்டார். சில அரசர்கள் தம் அக்கன் திருநாமத்தாலும் மாதாக்கள் பெயராலும் அம்மனை (நாச்சியார்) பிரதிட்டை செய்தனர்.

திருப்பள்ளி எழுச்சி, பதிகம், திருவெம்பாவை பாடப்பட்டன. "திருவாதிரைப் பெரிய திருமஞ்சனம்" ஆடி அயனம், கார்த்திகை, சிவராத்திரி முதலிய விழாக்கள் கொண்டாடப்பட்டன. பிற அம்மன் கோயில் பெரும்பாலும் பிடாரியார்' 'தங்கை' கோயில் எனப்பட்டன. கோயில் முதல் அடியாராகவும் உரிமையாளராகவும் சண்டிகேசுவரர் சுருதப்பட்டார். கோயில்களைப் புதுப்பிக்கத் தனிக்கொடை வழங்கப் புட்டது. பெண்கள் பலர் கோயில் கொடைகள் அளித்துள்ளது இம் மாவட்டத்தின் சிறப்பாகும்.

அணை உடையாமல் நிற்க, திருவிழாத்தடை நீங்க, 'தேவதைகளைத் திருப்திபடுத்த நரபலி கொடுக்கும் வழக்கமும்' கொற்றவைக்குத் தங்களைத் தாங்களே பலி கொடுத்துக் கொள்ளும் வழக்கமும் இருந்தன. சென்னிமலை, திங்களூர், விசயமங்கலம், பவானி, அந்தியூர் ஆகிய ஊர்களில் தலைப்பலி சிற்பங்கள் உள்ளன.