பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

ஈரோடு மாவட்ட வரலாறு


திருமடங்கள்

சமயப் பெரியவர்கள் தங்கி சமயம் வளர்த்த திருமடங்கள் ஈரோடு மாவட்டத்தில் இருந்துள்ளன. சிவாலயம் போலவே மடத்தை 'மடாலவம்' என்றனர். மடத்திற்கு மானியங்கள் 'மடப்புரம்' என்ற பெயரில் விடப்பட்டன. கோயிலை ஒட்டியும் பிரகாரங்களிலும் உள்ள இடங்களில் 'திருமடவளாகம்" எனப்பட்டது. அங்கு "தபசியர்', 'வைராகிகள்" இருந்ததாக ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

அலங்கியம் கல்வெட்டில் 'ஞானமூர்த்தி தேசிகர் மடம்' இருந்ததாக கல்வெட்டுக் கூறுகிறது. குறுப்புநாட்டு ஆதியூர்க் கல்வெட்டில் மடத்துக்குப் புண்ணியம் செய்தவர்கள் "திருப்பாட்டுப் பெற்ற நூற் றெட்டுச் சிவாலயத்தைத் தரிசித்த" பலன் பெறுவர் என்று கூறப் படுகிறது. கண்ணபுரம் கல்வெட்டில் "மகேசுவரர் மடம்” குறிக்கப் படுகிறது. மயில்ரங்கம் கல்வெட்டில் "திருஞான சம்பந்தக் கண்ணுடை வள்ளல் மடம்" குறிக்கப்படுகிறது. இவை அனைத்தும் சைவ சமயம் தொடர்பான மடங்களே. திருமலை நாயக்கர் கல்வெட்டில் ஈரோடு ‘சந்திரமதி முதலியார் மடம்' குறிக்கப்படுகிறது.

இன்றைய மடங்கள்

விசயமங்கலத்தை அடுத்த கூனம்பட்டியில் மாணிக்கவாசகர் மடமும், மருதுறைக் குருக்கள் பாளையத்தில் ஆலால சுந்தரர் மடமும். ஈரோட்டில் அப்பர் சுவாமிகள் மடமும், சிவகிரியில் கண்ணப்பர் மடமும், பாசூர் அகிலாண்ட தீட்சிதர் மடமும், நெருஞ்சிப் பேட்டையில் ஆயிர வைசியர் மடமும், சென்னிமலையில் செங்கத்துறைப் பூசாரியார் மடமும், வேளாளத் தம்பிரான் மடமும், ஈரோட்டில் சங்கரர் மடத்தின் கிளைமடமும் ஈரோடு காவிரிக்கரையில் இராகவேந்திரர் பிருந்தாவனமும் ஊஞ்சலூரில் சேஷாத்திரி சுவாமிகள் அதிட்டானமும் இராகவேந்திரர் பிருந்தாவனமும் உள்ளன.

கஸ்தூரிபா கிராமம் அருகிலும் நஞ்சை ஊத்துக்குளி அருகிலும் “தம்பிரான் வலசு" என்ற ஊர்கள் உள்ளன. அவை சைவத்துறவியர்க்குக் கொடுத்த கொடை ஊர்களாகும்.