பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

109


சித்தர்கள்

'சித்' என்றால் அறிவு என்று பொருள். சித்தர் பேரறிவு உடையவர்கள், பதினெண் சித்தர்கள் என்றும், பதினெட்டு வகையினர் என்றும் கூறுவர். இவர்கள் கண்ட மருத்துவ முறையே சித்த மருத்துவம்.

ஈரோடு மாவட்டத்தில் கொங்கணச் சித்தர் ஊதியூர் மலையில் இருந்தவர். அவர் உலையில் உலோகங்களை இட்டு ஊதி பொன் தயாரித்ததால் ஊதியூர் 'பொன் ஊதியூர்' எனப்பட்டது. ஊதியூர் மலை மேல் கொங்கணச் சித்தருக்குக் கோயில் உண்டு.

இடைஞானியார் தாராபுரம் வட்டம் மறவபாளையத்தில் அப்பிரமேய ஈசுவரர் அருள் பெற்றவர். அப்பிரமேயத் தலபுராணத்தில் இவர் வரலாறு விரிவாகக் கூறப்படுகிறது.

சிவவாக்கியர் சிவமலையைச் சேர்ந்தவர். சிவமலை என்ற பெயரே இவரால் பெற்றது என்பர். மலைமேல் சிவவாக்கியர் சமாதி உள்ளது.

பிண்ணாக்குச் சித்தர் சென்னிமலையில் வாழ்ந்தவர். பிளவு பட்ட நாக்கைப் பெற்றதால் இப்பெயர் பெற்றார். சென்னிமலை மேல் உச்சிக்குச் செல்லும் வழியில் உள்ள 'சந்நியாசி கோயில்" பிண்ணாக்குச் சித்தர் கோயில் என்பர். அருகில் இவர் தவமியற்றிய குகை உள்ளது.

பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் சித்தர் ஒருவரின் சமாதி உள்ளது. வெள்ளகோயில் வீரக்குமாரர், சின்னமுத்தூர் செல்லக் குமாரர், வேலம்பாளையும், சேமூர் குப்பியண்ணன் ஆகியோரும் தெய்வ அருள் பெற்ற சித்தர்களே. இவர்கள் தெய்வமாக வணங்கப் பெறுகின்றனர். கோபி வட்டத்தில் சித்தர் மலை உள்ளது. பருவாச்சி அருகேயுள்ள கருமலையாண்டவர் கோயில், கிழாம்பாடி முனியப்பன்கோயில், ஈரோடு ஐயனாரப்பன் கோயில் ஆகியவற்றில் பல சித்தர்களின் உருவச் சிலைகள் உள்ளன. ஐயனார் வழிபாடும் இங்கு சிறப்பாக இருந்துள்ளது.

ஆ) வைணவம்

ஈரோடு மாவட்ட மக்களும் ஆட்சிபுரிந்த கொங்கு அரசர்களும் கொங்கு நாட்டை ஆண்ட பிறநாட்டு அரசர்களும் பெரும்பாலும்