பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

ஈரோடு மாவட்ட வரலாறு


சைவர்களாக இருந்தாலும் வைணவ சமயத்தையும் பேணிக் காத்து வந்துள்ளனர். சிவாலயம் உள்ள ஊர்களில் எல்லாம் பெரும்பாலும் வைணவக் கோயிலும் இருந்தன. பவானி, கொடுமுடி, நத்தக்காரையூர், காடையூர் போன்ற ஊர்களில் சிவாலய எல்லைக்குள்ளேயே வைணவக் கோயில்கள் உள்ளன.

மயில்ரங்கம், ஈரோடு, எழுநூத்திமங்கலம், கொடுமுடி போன்ற பல ஊர் களில் ஒரே கொடை சிவன்கோயிலுக்கும். வைணவக் கோயிலுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. கொங்கு நாட்டை ஆட்சி புரிந்த பிட்டி தேவன் என்ற கங்க மன்னன் வைணவனாகி 'விஷ்ணுவர்த்தனன்" என்று பெயர் வைத்துக் கொண்டான். பெரியாழ்வார் பாசுரத்தில் "கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்" என வரும் அடிகளில் குறிக்கப்பட்ட 'கொங்கு' தாராபுர வட்டத்துக் கொங்கூரேயாகும். எனவே அவ்வூர் “மங்களாசாசனம்" பெற்ற ஊராகிறது.

இராமானுஜர் 11ஆம் நூற்றாண்டில் சோழனோடு ஏற்பட்ட மன வேறுபாட்டால் கொங்கு நாடு வழியாகக் கருநாடகம் சென்றவர் கொங்கூர் வந்து அங்கு வாழ்ந்த லட்சுமி என்ற கொங்குப் பிராட்டியாரால் உபசரிக்கப்பட்டு அங்கு சில நாட்கள் தங்கியிருந்தார். பின்னர் கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டைக்குச் சென்றார். 'பிரபந்நாம்ருதம்' என்ற வைணவ நூலின் தனியன்களில் கொங்குப் பிராட்டியார் வணக்கத்திற்கு உரியவராகப் போற்றப்படுகிறார். கொங்குப் பிராட்டியாரின் கணவர் 'கொங்கிலாச்சன்' வைணவ சிங்காசனாதிபதிகள் 74 பேரில் ஒருவராகக் குறிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வேதாந்த தேசிகர் தம் மதத்தைச் சேர்ந்த சிலராலும் அன்னியர்களாலும் தொல்லையுற்று ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலத்திற்கு வந்து பாதுகாப்பாகத் தங்கினார். இராமானுஜர் பாஷ்யங்களை அவர் சத்தியமங்கலத்தில் தான் பாதுகாத்தார். முற்றுப் பெறாமலிருந்த "பரமதபங்கம்" என்ற தம் நூலை சத்தியமங்கலத்தில் இயற்றி முற்றுப் பெறச் செய்தார். இதை அவர் பாடல் ஒன்று விளக்குகிறது.