பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

15. உம்மத்தூர் தலைவர் காலம்


(கி.பி.1489-1527)


மத்திய அரசு வலிமை குன்றும் பொழுதெல்லாம் அரசப் பிரதிநிதிகளும் சிற்றரசர்களும் கயேச்சையாக நிர்வாகம் செய்வது வழக்கம். விசயநகர மன்னன் இரண்டாம் தேவராயனுக்குப் பின் வந்தோர் வலிமையற்று இருந்த காரணத்தால், விசயநகரப் பிரதிநிதியாக இருந்த உம்மத்தூர்த் தலைவர்கள் தாங்களே கொங்கு நாட்டை சுயேச்சையாக ஆளத் தொடங்கினர்.

வீர நஞ்சராய உடையார் (1489-1500)

இவன் உம்மத்தூர்த் தலைவர்களின் முதல்வன். இவன் பெயர் பொறித்த கல்வெட்டுக்கள் ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், ஆறுதொழு, குன்னத்தூர், கொளிஞ்சிவாடி, சர்க்கார் பெரியபாளையம், டணாயக்கன் கோட்டை, நசியனூர், மறவபாளையம், வெள்ளோடு ஆகிய இடங்களில் கிடைக்கின்றன.

முதலில் 'மகாமண்டலேசுவரன்' என்று மட்டும் தன்னைக் கூறிக்கொண்ட வீரநஞ்சராயன் பின்னர் வீரப்பிரதாபன், புஜபலராயன், சமஸ்த ஜகதாதிபதியப்பன் முதலிய பட்டங்களைச் சூட்டிக் கொண்டான். இராமைய நஞ்சைய தேவன், தென்கடம்பை ஓன்னக்கன் செட்டி ஆகியவர்களை காரியத்துக்குக் கர்த்தராக நியமித்த நஞ்சராயன் தாரமங்கலம் கெட்டி முதலியார், சேவூர் ஆண்ட மன்றாடியார், பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார் போன்றவர்களை மதித்துப் பொறுப்புக்கள் கொடுத்தான்.

முற்றிலும் அழிந்துகிடந்த கொடுவாய்க் கோயிலைப் புதுப்பித்து பழைய கல்வெட்டுக்களையும் வெட்டி வைத்தான். நசியனூர், வெள்ளோடு சிவாலயங்கள் திருப்பணி செய்யப்பட்டன. கொடிவேரி அணையைப் பவானியைத் தடுத்துக் கட்டினான். நெருஞ்சிப் பேட்டை அருகே காவிரியைத் தடுத்து அணை கட்டிய முதல்வன்