பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

18. ஐதர்அலி திப்புசுல்தான் காலம்


(கி.பி. 1761-1799)


இசுலாம் மதகுருவாக பஞ்சாபிலிருந்து மைசூர் வந்த குடும்பத்தைச் சேர்த்த வீரர்கள் நான்கு தலைமுறை மைசூர் உடையாரிடம் பணிபுரிந்தனர். இரண்டாம் கிருஷ்ணராச உடையார் (1734-1766) காலத்தில் தளவாய் தேவராசய்யாவின் தம்பி பிரதானி நஞ்சராசய்யாவின் கீழ் ஒரு சாதாரணப் படை வீரராக ஐதர் அலி பணிபுரிந்தார்.

மராட்டியருடனும் கர்நாடக நவாபுடனும் மைசூர் உடையார் சார்பில் நஞ்சராசய்யா போரிட்டபோது பெரும் வீரம் காட்டி ஐதர் அலி புகழ்பெற்றார். அரசரால் அத்தாணி மண்டபத்தில் "பத்தே ஐதர் பகதூர்" என்று பாராட்டப்பட்டார். நஞ்சராசய்யா ஐதர்அலிக்கு "பௌஸ்தார்" பதவி கொடுத்து 200 காலாள்கள், 50 குதிரைகள் கொண்ட படைக்குத் தலைவர் ஆக்கினார். திண்டுக்கல்லுக்குப் பணிபுரிய அனுப்பப்பட்ட ஐதர் கண்டேராவ் என்பவரோடு சேர்ந்து கொண்டு ஈரோடு பகுதியில் வரிவசூல் செய்தார்.

போர்ச் செலவுகளுக்காகக் கோவை. ஈரோடு மாவட்டப் பகுதியில் அதிகம் வரிவசூல் செய்ய அரிசிங் என்பவர் மைசூர் அரசனால் அனுப்பப்பட்டார். துணை செய்ய அனுப்பப்பட்ட ஐதர்அலி அரிசிங்கைப் புறந்தள்ளி தானே வரி வசூலித்ததாகச் சிறு தொகையை அரசனுக்கு அனுப்பி விட்டுப் பெரும் தொகையைத் தானே வைத்துக் கொண்டார். அரசுக்கு அதிக வருவாய் தரக்கூடிய கோவை, ஈரோடு பகுதிகளில் ஐதர் தன் ஆதிக்கத்தைத் செலுத்தினார். வரி வசூலைத் தானே வைத்துக் கொண்டார், லஞ்சம் கொடுத்துப் படைவீரர்களைத் தன் வசமாக்கினார்.

சீரங்கப்பட்டணம் வந்த ஐதர் நஞ்சராசய்யாவை மூன்று லட்சம் ரூபாய் மதிப்புடைய ஜாகீர் ஒன்றை அளித்து பதவியிலுருத்து நீக்கி தான் "தளவாய்" ஆகி நண்பன் கண்டேராவைப் 'பிரதானி' ஆக்கினார்.