பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

91


படை எடுத்துவந்த மராட்டியருக்கு ஐதர் கொடுத்தது 35 இலட்சம் ரூபாய்; மீண்டும் 1772இல் மராட்டியர் ஐதரிடம் பெற்றது 30 இலட்சம் ரூபாய். 1783இல் கும்பினிப் படைத்தலைவன் 81 இலட்சம் ரூபாய் திப்புவின் ஆட்களிடம் பறித்து விட்டான். 1787இல் நிஜாம், மராட்டியர் கூட்டுப்படையைத் திருப்பி அனுப்ப 45 இலட்சம் ரூபாய் கொடுத்தார். மூன்றாம் மைசூர்ப் போரின் இறுதியில் கார்ன் வாலிசோடு 19.3.1991 இல் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி கும்பினி போர்ச் செலவுக்காகப் பெற்றது 3 கோடி ரூபாய்! ஒரு சமயம் தன் இரு மகன்களைக் கும்பினியிடம் அடகு வைத்து மீட்டார். மற்றொரு சமயம் கோலாரை அடகு வைத்துப்பின் மீட்டார். இச்செலவுகளை ஈடு செய்ய அதிக வருவாய் வரும் கோவை, ஈரோட்டுப் பகுதிகளில் மிக அதிகமான வரியை வசூலித்தனர்.

கொடுமைப்படுத்தி வரிப்பணம் அதிகம் வாங்கியதோடு திப்புவின் படையினர் கொள்ளையுமடித்தனர். "சையது நவாபு சாயபு சிறிது குதிரையோடு வந்து இடையகோட்டை கொள்ளை செய்து அக்கினிப் பரகெதியும் போட்டு வடக்கே போய் விட்டார்கள்" என்பது ஒரு மெக்கன்சி ஆவணப் பகுதியாகும்.

இதனால் மிக அதிகமாக வசூலிக்கப்பட்ட வரியைக் கொடுக்க முடியாமல் பாளையக்காரர் பலர் திண்டுக்கம், சங்ககிரி, சீரங்கப்பட்டணத்தில் சிறை வைக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் கும்பினியாரை வரவேற்றது மட்டும் அல்ல; படைத்துணையும் செய்து உதவினர்.

"ஸ்ரீ செங்கன் துரையவர்கள் நாளையில் வெள்ளை மருதன் சல்லியத்தில் அறுநூறு சனம் அனுப்பிவச்சு, ஸ்ரீ அக்கினீசு துரையவர்கள் மக்காளி துரையவர்களிடத்தில் காத்திருந்து சின்ன மருதன் பெரிய மருதன் சனத்துடனே சண்டை செய்து கும்பினிக்குக் கருத்தாக நடந்து கொண்டு எதிரி வகைக் குறிக்காரரை தலையை அறுத்து கும்பினித் துரையவர்கள் முன்னே கொண்டு வந்து போட்டதில் கும்பினியாரவர்களுக்குந் தயவு வந்து குதிரையும் கொடுத்தனுப்பினார்கள்".