பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

ஈரோடு மாவட்ட வரலாறு


பள்ளிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் இந்தியாவை ஆளும் மாட்சிமை தாங்கிய இங்கிலாந்து அரசர்க்கும், அரசியர்க்கும் வாழ்த்துப் பாப்பாடப்பட்டது. புலவர்கள் தாங்கள் எழுதும் பாடல்களிலும் இலக்கியங்களிலும் அவர்களைப் புகழ்ந்தனர்.

1876ல் ஏற்பட்ட மிகக்கொடிய தாது வருடப் பஞ்சம் பற்றி 'பஞ்ச லட்சணத் திருமுக விலாசம்" என்ற நூலை வில்லியப்ப பிள்ளை என்பார் பாடினார், அதில் விக்டோரியா மகாராணியார்க்கு இடையில் வாழ்த்துப் பாப் பாடப்பட்டுள்ளது.

"தொல்லையுறு:
இன்னல் பகையச்சம் என்பதில்லாமலே உலக
மன்னுயிரைத் தன்னுயிர்போல் வாழ்விக்கும் - அன்னை விக்
டோரிமகா ராணிசெங்கோல் ஊழி வாழ்கவெனப்
பார்முழுதும் பல்லாண்டு பாடினவே"

என்பது அப்பாடல் ஆகும்.

அரசு நீர்ப்பாசன வசதிகள் செய்து கொடுக்காததாலும், உற்பத்தியாகும் உணவுப்பொருளில் பெரும்பகுதியை ஏற்றுமதி செய்ததாலும், அவுரி, பருத்தி பயிர்செய்யக் கட்டாயப்படுத்தியதாலும் மிகுதியான வரிக்கொடுமையாலும் தான் அத் தாதுவருடப் பஞ்சம் நீட்டித்தது. உண்ண உணவும், குடிக்கத் தண்ணீரும் கிடைக்காமல் பன்னிரண்டு ஆண்டுகள் நீட்டித்த பஞ்ச காலத்திலேயே மேற்கண்டவாறு புகழ்ச்சிப்பாடல் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தாதுவருடப் பஞ்சத்தில் 40 லட்சம் பேர் இறந்தனர்.