பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


அன்னையின் வயிற்றில் இருந்து “ஆ” என அலறிக் கொண்டு மண்ணிலே பிறந்து, விண்ணிலே பறந்து விதவிதமான கற்பனைகளில் மிதந்து, சிறகொடிந்த பறவைபோல செய்வதறியாது, தன்னையே இழந்து, கடைசியிலே, “ஓ” என அலறி உயிரை விடுகின்ற ரீங்கார நிகழ்ச்சிகளின் தொகுப்பல்ல வாழ்க்கை !

அகத்திலே ஊற்றெடுத்து, அந்தச் சுகத்திலே பெருக்கெடுத்து, அவற்றை முகத்திலே வெளிப்படுத்திக் காட்டுகின்ற வித்தைக்காரன் சத்தம்தான் வார்த்தைகள்.

ஒளிந்து கிடக்கின்ற உள்ளத்தை உலகத்திற்குப் பிழிந்து காட்டுகின்ற, உணர்ச்சி ஒலிகள்தான் வார்த்தைகள். வார்த்தைதான் வாழ்க்கை - வாழ்க்கைதான் வார்த்தை. ஒருவன் வாழ்கின்ற வாழ்க்கை அவன் பேசுகின்ற வார்த்தை போலவே அமைந்துவிடுவதும் உண்டு.

கம்பராமாயணத்திலே, கொம்பனாகக் காட்சியளிக்கின்றவன் கும்பகர்ணன். காலத்தால் அழியக்கூடாது என்பதற்காகக் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் செய்கின்றான். தனக்கு நித்தியத்துவம் வேண்டும் என்று நினைத்து, நினைத்து நெடுங்காலம் நின்று பார்த்தான். கடைசியாகக் கடவுள் வந்தார். “உன் தவத்திற்கு மெச்சினோம். என்னப்பா வேண்டும்?” என்றார்.

கும்பகர்ணனோ உரைக்கவில்லை. உளறிவிட்டான். நித்தியத்துவம் வேண்டுமென்பதற்குப் பதிலாக நித்திரைத்துவம் வேண்டுமென்றான். அந்த வடிகாலற்ற வார்த்தையே அவனது வாழ்க்கையாக மாறிற்று.