பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

9.


ஓங்கி உயர்ந்து உல்லாசமாக வாழ வேண்டிய கும்பகர்ணன், தூங்கி வழிந்து வாழ்க்கையையே தொலைத்து விட்டான். அவனது வார்த்தையும் வாழ்க்கையும் இலக்கியம் சிந்திக்காட்டுகின்ற இதமான இன்பமாக அல்லவா காட்சியளிக்கின்றது!

காவிய உலகத்தை விட்டு விடுவோம். இந்தக் கலிகாலத்திலே நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியை நினைவிற்குக் கொண்டு வருவோம். என்னோடு ஒரு கல்லூரியில் பணியாற்றிய தமிழாசிரியர், ஒருவர் வார்த்தைகளைத் தனக்குச் சாதகமாக வளைத்து ஒடித்து வசமாக்கிக் கொள்கிற வித்தை கற்ற வித்தகர். அந்த ஞானத்தை அபரிமிதமாகப் பெற்றவர்.

அவருக்கும் ஒரு ஆங்கில ஆசிரியருக்கும் “யார் பெரியவர்?” என்பதில் ஒரு உள்மனப் போராட்டம். அவரை எப்படியும் வீழ்த்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருந்த கொக்கைப் போல, இரண்டு காலில் தவமிருந்தார் தமிழாசிரியர்.

அந்த நாளும் பஸ் வடிவத்தில் வந்தது. கல்லூரி மாணவர்கள் சிலருக்கும், ஓட்டுனர், கண்டக்டருக்கும் இடையே ஒரு பிரச்சினையின் காரணமாகக் கை கலப்பு ஏற்பட்டது. ஆங்கிலப் பேராசிரியர் அங்கே வந்தார். “படிக்காத கூட்டம் போல (Illiterate mobs) போல ஏன் நடந்து கொள்கிறீர்கள். இடத்தை விட்டு அப்பாலே போங்கள்” என்று மாணவர்களைத் திட்டி விரட்டும் போது, திடீரென அங்கே தோன்றினார் நம் தமிழாசிரியர்.