பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


அவரது படித்த அறிவில் வெடித்தது ஒரு ஒளி வெள்ளம். எதிராளியின் வார்த்தையைத் தனக்கேற்றபடி வளைத்தார். மரியாதையுள்ள மாணவர்களைப் பார்த்து “படிக்காத நாய்கள் (Illiterate dogs) என்று வெறித்தனமாக உங்களைப் பேசுவதா? ஏசுவதா?” என்றார்.

அவரது பாசமழையின் படபடப்பைப் பார்த்த மாணவர் கூட்டம், அவர் பக்கம் சாய்ந்தது. ஆங்கிலப் பேராசிரியரைக் கல்லூரியை விட்டு மாற்று என்று - கல்லூரிக்கு வெளியே நின்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். ஏழெட்டு நாட்களுக்குப் பிறகு கல்லூரி நிர்வாகம் அவரை வேறு ஒரு கல்லூரிக்கு மாற்றி அனுப்பியது.

வெற்றி பெற்ற தமிழாசிரியர் தான் பெற்ற வெற்றியின் இரகசியத்தை, கண்டவர்களுக்கும், காணாதவர்களுக்கும் சொல்லிக் கொண்டு திரிந்தார். அவர் பேசுகிற வார்த்தையும் அர்த்தம் உள்ளதுதானே.

அவர் குடும்பத்திலுள்ள ஒரு பெண் அந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தாள். அந்தப் பெண்ணிடம் சில மாணவர்கள் செய்த சில்மிசத் தகவல், தமிழாசிரியரிடம் கொண்டு செல்லப்பட்டது. கோபம் கொண்ட அவருக்கு வார்த்தைகள் கொப்பளித்துக் கொண்டு வந்தன.

“காமர்ஸ் மாணவர்கள் எல்லோரும் காமுகர்கள்” என்று அடுக்கு மொழியில் அனல் பறக்கப் பேசினார். அந்த வார்த்தைகளைக் கேட்ட மாணவர்களில் சிலர், “காமுகர்கள்” என்ற வார்த்தையைச் சொன்னதற்காக