பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்

படுத்தும் வாய். அது திருவாய். அந்தத் திருவாயிலிருந்து தெள்ளருவியாகச் சொல்லருவியாக வருவதுதான், நாம் ஒடுகிற முயற்சியாகவும், தேடுகிற வாழ்க்கையாகவும் அமைந்துவிடுகிறது.

‘நானே உங்களுக்கு வார்த்தையாக விளங்குகிறேன்’ - என்பது ஒரு தெய்வத்தின் திருவாய் மொழியாகும்.

வார்த்தல் என்பதுதான் வார்த்தையாக வடிவெடுத்து வந்திருக்கிறது. வார்த்தல் என்றால் வழங்குதல், தந்து காத்தல், பெறுபவர்க்குப் பேரின்பம் ஊட்டுதல் என்பதாகும். நம்மை நாமே நலப்படுத்திக் கொள்ள, நமது வழிநடைப் பாதையைப் பலப்படுத்திக் கொள்ள, நெஞ்சுக்கு அமைதி தரும் விதமாக நெறிப்படுத்திக் கொள்ள வார்த்தைகள் உதவுகின்றன. 'பேசாத வார்த்தைக்கு நீ எஜமானன். பேசிய பிறகு அந்த வார்த்தை தான் உனக்கு எஜமானன்' என்பது பெரியோரின் வாக்கு. பேசாதவரை ஒரு மூடன் ஞானியாகத் தெரிகிறான் என்பதும் நம்மை வியக்க வைக்கின்ற விழுமிய வார்த்தையாகும்.

வாழ்க்கை வாழ்வதற்கே

எல்லோரும் ஏற்றுக் கொண்ட வேதாந்தம், சித்தாந்தம் இதுதான். வாழ்வதற்காகப் பிறந்தோமா? பிறந்ததற்காக வாழ்கிறோமா? இந்த இரண்டு கேள்விகளுக்கும், இடைப்பட்டு, தடைப்பட்டு, நடை கெட்டு, விடையற்று, விழுந்தும் விழாமல், அந்தரத்திலே இருக்கும் இந்திரலோகம் போல, அரட்டி, மிரட்டிக் கொண்டு இருக்கும் கேள்விகள்தான் இவை.